Wednesday 6 December 2023

சரியான நடவடிக்கையா?


                                      Minister of  Education  Fadhilna Sidek

பினாங்கில் நடைபெற்ற  தமிழ் நிகழ்வு ஒன்றில் கடவுள் வாழ்த்துப்  பாடுவதை தடை செய்த சம்பந்தப்பட்ட  கல்வி அதிகாரி,   வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டதாக  அமைச்சரின் உதவியாளர்  தியாகராஜ்  தனது  முகநூலில்  வெளியிட்டிருப்பதாக  "வணக்கம்  மலேசியா"  செய்தி வெளியிட்டிருக்கிறது. 

அது நடந்ததா நடக்கவில்லையா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்ல. ஏதோ அவர்கள் சொல்லுகிறார்கள். நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். அவ்வளவு தான்.  

பொதுவாக   அரசாங்கத்தில் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது  இது போன்ற செய்திகள்   தொடர்வதும்  இயல்பு தான்.  அவர் மாற்றப்பட்டார்! அவ்வளவு தான்! பிரச்சனைக்குத் தீர்வு கண்டாயிற்று! இனி மேல் எதையும் பேச வேண்டாம்!

பொது மக்களைப் பொறுத்தவரை  இந்த "மாற்றப்பட்டார்"  என்று சொல்லுகிறார்களே அது  எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வாய்ப்பில்லை. என்னவோ சொல்லுகிறார்கள். நாமும் கேட்டு வைக்கிறோம். இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறார்கள்!  ரொம்பவும் புத்திசாலிகள்!

இது போன்ற  செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான தீர்வு அவர்களை வேறு ஒரு துறைக்கு மாற்றுவது தான்.  இப்படி ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்த எந்தப் புண்ணியவானோ  தெரியவில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒருவன் தவறு செய்தான். அப்படியென்றால் அவனுக்கு அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் அவன் முயற்சி செய்யவில்லை. ஒன்றும் தெரியாத உதவாக்கரை அவன். அப்படியிருக்க அவன் ஏன் பதவியில் தொடர வேண்டும்?  அவனுக்கு ஓர் ஆண்டு சம்பளம் இல்லா விடுப்புக்  கொடுத்து, அரசாங்க நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள,  அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இப்போது நம் நாட்டில் எதனால் இது போன்ற சம்பவங்கள்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன?  காரணம்  அவன் வயிறு தொடர்ந்து நிரம்பி விடுகிறது!  வேறு ஒரு துறைக்கு மாற்றினாலும்  அங்கேயும் அவன் தவறுகள் தொடரத்தான் செய்யும்.  அவன் எப்போது  ஒரு நல்ல குடிமகனாக மாறுவது?

இப்படி மாற்றுவது எல்லாம் சும்மா யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.  ஏற்ற தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.  தண்டனைக் கடுமையாக இல்லை என்றால்  இது போன்ற அதிபுத்திசாலித்தனமான  செயல்கள் எல்லாம்  தொடரத்தான் செய்யும்!  தட்டிக்கேட்க ஆள் இல்லை என்றால் இது நடந்து கொண்டே தான் இருக்கும்.

இது சரியான நடவடிக்கையாக நான் கருதவில்லை!

No comments:

Post a Comment