Wednesday 27 December 2023

முகக் கவசம் கட்டாயம்!

 

இனி கல்விக்கூடங்களில்   முகக்கவசம் கட்டாயம் என்பதாக  கல்வி  அமைச்சு கூறுகிறது.  

ஆமாம். கோவிட்-19பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல மரண எண்ணிக்கையும்  கூடிக் கொண்டே போகிறது.

எது எப்படியிருப்பினும் மக்களின் பதுகாப்பு  என்பது முக்கியம். அதுவும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியம்.  வந்தபின் பாதுகாப்புக் கொடுப்பதைவிட ஆரம்பத்திலேயே  நாம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால்  பிரச்சனைகளைக் குறைத்து விடலாம். 

அதைத்தான் கல்வி அமைச்சு கூறுகிறது. நமக்கு அது தேவை என்றால் அதனைக் கடைப்பிடித்துத் தான் ஆக வேண்டும். பள்ளிப் பிள்ளைகளின்  நலன் தான் முக்கியம்  என்பதாகக் கல்வி அமைச்சு கூறுகிறது. நம் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தான் அறிவுரைக் கூறி   முகக்கவசம் ஏன் முக்கியம் என்பதை விளக்கி  அவர்களுக்கு  வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

ஒன்றுமில்லை ஏற்கனவே பெருந்தொற்றின் போது  நாம் என்ன செய்தோம்?   மாணவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்ய வேண்டும்  என்பதைச் சுகாதார அமைச்சு கூறிய வழிகாட்டல்களின் படி  அப்போது என்ன செய்தோமோ அதனையே இப்போதும் செய்ய வேண்டும். அவ்வளவு தான்.    மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்கள்,  மற்றும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வேலையாள்களும் செய்து தான் ஆக வேண்டும்.   அது கட்டாயம்.

இது போன்ற பெருந்தொற்று என்பது ஆபத்தானது என்பது நமக்குத் தெரியும்.   உலகையே உலுக்கிய ஒரு தொற்று நோய். பல இலட்சம் பேரை காவு வாங்கிய ஒரு தொற்று.  இப்போது அந்நோய்  கட்டுப்பாட்டில்  உள்ளது என்பது உண்மை தான்.

நம் நாட்டைப்பொறுத்தவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதனை ஓரளவு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டோம்.  ஆனாலும் அதற்கு முடிவே இல்லை என்பது போல  அவ்வப்போது வெவ்வேறு வடிவத்தில் தலைநீட்டிக் கொண்டு தான் இருக்கிறது.  அதற்கான தடுப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு தான் வருகின்றன.

என்ன செய்வது?  சுகாதார அமைச்சு சொல்லுவதைத்தான்  நாம் கேட்க வேண்டும். கல்வி அமைச்சு சொல்வதைத்தான் மாணவர்கள் செவி சாய்க்க வேண்டும்.  எல்லாம் மாணவர்களின் நலனுக்குத்தான்.

மாணவர்களே!  முகக்கவசம் அணியுங்கள். நெருக்கமாக இருக்காதீர்கள். எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். இதுவும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.  வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment