Saturday 2 December 2023

துடைப்பைக் கட்டையும் துப்பாக்கி தான்!

ஒரு வயதானப் பெண்மணியின் வீர்தீரச் செயலைப் பாருங்கள்.

இது நடந்தது  இந்தியா,  அர்யானா, ரோடாக், தபர்  காலனியில்.  அந்தப் பெண்மணியின் பெயர்  சகுந்தலா தேவி.   அவரது கடைசி மகனைச்  சுட வந்த    துப்பாக்கிக்காரர்கள்  கடைசியில் ஏமாந்தது தான்  மிச்சம். அவர்களது பாச்சா பலிக்கவில்லை!

அவர்களது துப்பாக்கிச் சூடு தவறியதால்  அவரது மகன் தப்பி வீட்டினுள்  ஓடி ஒளிந்து கொண்டார்.  துப்பாக்கிகாரர்கள் அவரைத் துரத்திக் கொண்டு வீட்டை நோக்கி ஓடிய போது  அவரது தாயாரான சகுந்தலாதேவி 'என்னவோ ஏதோ' என்று நினைத்து தன் கையிலிருந்த  துடைப்பைக்கட்டையுடன்  வெளியே வந்த போது ஏதோ விபரீதம் என்று  தெரிந்து கொண்டார்.  உடனே துடைப்பைக்கட்டையுடன்  அந்தத் துப்பாக்கிக்காரர்களைத் தாக்குவதற்குத் தயாரானார்.  வீட்டினுள் போக முடியாமல் அவர்களைத் தடுத்துவிட்டார்.   துப்பாக்கிக்காரர்களும் தொடர்ந்து எதுவும் செய்ய முடியாமல்  பின் வாங்கிவிட்டனர்!

அந்த வீரத்தாயின் மகன்,   அரிகிசன், துப்பாக்கிச் சூட்டின் போது  ஏற்பட்ட காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தத் தாக்குதலின் பின்னணி  என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. " சீறி வந்த புலியந்தனை முறத்தில் அடித்துத் துரத்தினாலே"  பெண்ணொருத்தி  அது எந்த அளவு உண்மை என்பது மட்டும் புரிகிறது.  ஆபத்து என்று வரும் போது  சீறிவரும் புலியாவது  துப்பாக்கியாவது எதையும் எதிர்கொள்ள தயார் என்பது தான் நமது பெண்களின்  இயல்பு.   அதனைச் செய்து காட்டிவிட்டார் அந்தத் தாய்.

தனது மகனுக்கு ஆபத்து என்றதும் சீறி எழுந்திருக்கிறார்  அந்தத் தாய். அது தாயின் இயல்பு. பொங்கி எழுந்ததும் அல்லாமல் அவர்களையும்  துடைப்பக்கட்டையிலேயே தாக்கியிருக்கிறார்.  அந்தத்  தீயவர்கள் அதனை எதிர்பார்க்கவில்லை. அதற்கு மேல் அங்கிருந்தால் ஆபத்து  என்று பின்வாங்கிவிட்டார்கள்!

ஆமாம், துப்பாக்கிக்கும் துடைப்பைக்கட்டைக்கும் என்ன தான் சம்பந்தம்? ஒன்றுமில்லை.  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அது போலத்தான் இதுவும். அந்த நேரத்தில்  துடைப்பைக்கட்டை தான் அவர் கையில் இருந்தது.  அதனை அவர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.  அந்த நேரத்தில் அது தான் அவரின் துப்பாக்கி!  வீரம் எப்படியும் வரலாம். எந்த உருவத்திலும் வரலாம். கையில் என்ன இருக்கிறது அது போதும் அப்போதைய அபாயத்தை எதிர்நோக்குவதற்கு!

துடைப்பைக்கட்டையும்  ஒரு துப்பாக்கி தான்!


No comments:

Post a Comment