Tuesday 26 December 2023

ஏன் இந்த அவசரம்?

 


மித்ரா அமைப்பு சமீபத்தில் தான் பிரதமர் துறைக்கு மாற்றம் கண்டது.

அந்த மாற்றத்தைத் தான் பலரும் விரும்பினர். காரணம் மித்ரா சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால்  அதற்குப் பிரதமர் துறை தான் சரியான தீர்வு என்பதாகப்  பலரும் கூறிவந்தனர்.  அதனைப் பலரும் வரவேற்றனர். ஒரே காரணம்  பிரதமர் துறையின் நம்பகத்தன்மை.

ஆனால் என்ன காரணமோ இந்தியர்கள் எதனை விரும்புகிறார்களோ  அதற்கு நேர்மாறாக செயல்படுவதே நமது பிரதமரின் இயல்பாகப் போய்விட்டது!  காரணம் தெரியவில்லை.  அவர் பிரதமர் ஆனதிலிருந்து அப்படித்தான் செயல்படுகிறார்!  இந்தியர்கள் விரும்பியது போல எதுவும் நடக்கவில்லை. காரணம் அவர் மலேசியர்களின் பிரதமர்! இந்தியருக்கு மட்டும் அல்ல என்பது தான்.

மித்ரா அமைப்பு ஏற்கனவே ஒற்றுமைத்துறை அமைச்சிலிருந்த போது பலவேறு புகார்கள். யார் மீது? ஒற்றுமைத்துறை அமைச்சர் மீது தான்.  அவரால்,  எழுப்பட்ட புகார்கள் மீது எந்த பதிலையும் கூற முடியவில்லை! மழுப்பலான பதிலைத் தவிர  வேறு எந்த பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.  நாடாளுமன்றத்திலும் அவருடைய பதில்கள் அப்படித்தான் அமைந்தன.  கடைசிவரை அந்த மழுப்பலோடு அவர் விடைப்பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் தான்  மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது. ஏதோ  நமக்குத் திருப்தி அளித்ததோ இல்லையோ, டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  தன்னால் முடிந்ததைச்  செய்தார். கல்விக்கு ஆக்கபூர்வமாகச்  செய்தார்.  ஒரு சில வேண்டாத வேலையும் செய்தார். இருப்பினும் அவரைப் பாராட்டலாம்.  தொடர்ந்து அவரின் பார்வையில்  இருந்திருந்தால்  இன்னும் கொஞ்சம் நல்ல காரியங்களையும் செய்திருப்பார்.

இப்போது அந்த அமைப்பை மீண்டும் ஒற்றுமைத்துறைக்கே கொண்டு வருவது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கே மாற்றிவிட்டு அதற்குச் சப்பைக்கட்டு கட்டும்   வேலையில் சிலர் ஈடுப்பட்டிருக்கின்றனர். பிரதமர் அதைப் பார்ப்பார் இதைப் பார்ப்பார், அதைக் கவனிப்பார் இதைக் கவனிப்பார், அவரைக் கேட்டுத்தான் அனைத்தும் நடக்கும்  என்றெல்லாம் கதைக்கின்றனர்.

பிரதமருக்கு  ஏன் வேறு வேலைகள் இல்லையோ?   மித்ரா  அவ்வளவு முக்கியமா என்ன? அவருக்கு இருக்கும் வேலையில் மித்ரா என்ன அவ்வளவு முக்கியமா? அவருக்கு மலாய்க்காரர் பிரச்சனையோ பெரிய பிரச்சனையாக அவரைக் குத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மித்ராவைப் பற்றி அவருக்கு என்ன கவலை?

நமக்கு என்னவோ மித்ரா வை இரவோடு இரவாய் ஒற்றுமைத் துறைக்கு கடத்திக்கொண்டு போய் விட்டதாகவே தோன்றுகிறது!

No comments:

Post a Comment