மலேசியர்களின் வினோதப் பழக்கங்களில் ஒன்று குப்பைகளோடு வாழ்வது!
ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுபவர்களை என்னவென்று சொல்லுவது? குப்பைகளோடு வாழ விரும்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்! நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது நரகலைத் தேடித்தான் போகும்! அதன் குணத்தை மாற்ற இயலாது! அப்படித்தான் நாமும் இருக்கிறோம்!
நம் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கடமை உணர்ச்சி பாராட்டுக்குரியது. அதற்காக நமது வீட்டுக் குப்பைகளைப் பக்கத்து வீட்டுக்குத் தள்ளிவிடுவது என்றால் என்ன பொருள்? நாம் குப்பைகளில் வாழக்கூடாது ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் குப்பைகளோடு வாழலாம்
வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி நம் வீட்டைப் போலவே அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் நாட்டின் நலனை விரும்புபவர்கள்.
இன்று சிங்கப்பூரை உலக நாடுகள் புகழ்கின்றன. அது மிக சுத்தமான நாடு என்பதும் முக்கிய காரணம். நம்மால் அது முடியாதா? நம் நாட்டில் எதுவெல்லாம் முடியாதோ அதனையெல்லாம் செய்து காட்டுகிறது சிங்கப்பூர்! அரசியல் ரீதியில் இரு நாடுகளும் பிரிந்திருந்தாலும் பூகோள ரீதியில் இரண்டும் ஒரு நாடு தான். அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.
அப்படி என்ன தான் தடை நம்மிடம்? அறிவு குறைவு என்று சொல்லலாமா? அதெப்படி? படித்தவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகிறதே! படித்தவர்கள் பிள்ளைகளுக்கு எந்த நற்பண்புகளையும் சொல்லிக் கொடுப்பதில்லையோ!
நாடு சுத்தமாக இருக்க வேண்டுமானால் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் தான் அதற்குப் பொறுப்பும் ஏற்க வேண்டும். சுத்தம் சும்மா வந்துவிடாது.
கார்களில் பயணம் செய்யும் போது என்ன என்ன அநியாயங்கள் நடக்கின்றன. தின்றுவிட்டு பைகளை வெளியே தூக்கி எறிகிறார்கள். குடித்துவிட்டு பிளாஸ்டிக் பைகளை நடுரோட்டில் வீசுகிறார்கள். இது போன்ற பழக்கங்களால் தான் கண்ட இடங்களில் குப்பைகளைப் போடும் பழக்கம் ஏற்படுகிறது.
அனைத்தையும் நிறுத்த ஒரே வழி தண்டனை மட்டும் தான்! அதுவரை குப்பைகளோடு தான் வாழ வேண்டும்!
No comments:
Post a Comment