கோலகுபுபாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அதற்கு முழு பொறுப்பையும் உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் இராமசாமியே பொறுப்பேற்க வேண்டும் என துணை அமைச்சர் டத்தோ ரமணன் எச்சரித்திருக்கிறார்!
ஆனாலும் டத்தோ உங்களுடைய குற்றச்சாட்டு சரியா என்று யோசித்துப் பாருங்கள். பேராசிரியர் சொல்லும் குறைகள் உண்மையா, பொய்யா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களது கடமைகளைச் சரியாக செய்திருந்தால் அவர் உங்கள் மீது அந்தக் குற்றச்சாட்டுக்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சீனர்களுக்கும், மலாய்க்கரர்களுக்கும் உங்களது கடமைகளை விழுந்து விழுந்து செய்கிறீர்கள். அதுவே இந்திய சமுதாயம் என்றால் அவர்களுக்கு உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிசெய்ய பார்க்கிறீர்களே, இது நியாயமா?
கோலகுபுபாருவில் உள்ள பிரச்சனை உங்களுக்குத் தெரியாதா? அந்தத் தொகுதியில் உள்ள வீடமைப்புப் பிரச்சனையை உங்களால் ஏன் தீர்க்க முடியவில்லை? மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஏன் அந்தப் பிரச்சனையை இழுத்தடித்தார்? என்ன காரணம்? அது ஒன்றும் பேராசிரியர் இராமசாமியின் பிரச்சனை அல்லவே! அந்தத் தொகுதியில் உள்ள மக்களின் பிரச்சனை தானே? அது உங்களுக்குத் தெரிந்திருந்தும் ஏன் அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியவில்லை? தொகுதியைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை. ஏன்? இப்போதாவது அதனைத் தீர்த்து வையுங்களேன்.
அங்குள்ள இந்தியர்களின் முக்கிய கோரிக்கை வீடமைப்புப் பிரச்சனை இடைத்தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என்பது தான். இப்போது அதைச் செய்யுங்களேன். ஏன் முடியாது? அப்படி ஒன்றும் தீர்க்கப்பட முடியாத பிரச்சனை அல்லவே!
கட்சியில் பெரிய பெரிய மேதைகள் இருக்கும் போது யாருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அந்த மக்களின் கோரிக்கை சரியானது தான். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அவர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. அதனால் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.
சும்மா அவர் பொறுப்பு, இவர் பொறுப்பு என்று வாய் சவடால் வேண்டாம். எது நடந்தாலும் அது உங்களுடைய பொறுப்பு தான்!
No comments:
Post a Comment