Saturday, 20 April 2024

இன்னும் பிரச்சனை தீரவில்லை!

நமக்கு இன்னும் பிரச்சனை முடியவில்லை. அப்படித்தான்  நமது செயல்கள் மெய்ப்பிக்கின்றன.

ஏதோ ஒரு பிரச்சனைக்காக கூக்குரலிட  அது பெரிய பிரச்சனையாகி  இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது!  எங்கோ அது  புகைந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது!

இந்த எதிர்ப்பைத் தொடர வேண்டாம் என்று  பலர் அறிவுறுத்திவிட்டனர்.  ஆனால் எதுவும் எடுபடவில்லை. நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

எதிர்ப்பாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசாங்கம் சரியான  பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.  அவர்கள் இஸ்ரேல் மீதான் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டனர்.  அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் சரியாகத்தான் செய்கின்றனர்.  அதுவே போதுமானது.  எத்தனையோ  இஸ்லாமிய நாடுகள்  வாய் திறக்கவே பயப்படுகின்ற போது   ஒரு சிறிய நாடான மலேசியா  தனது கருத்துகளை வெளிப்படையாகவே  தெரிவிக்கின்றனர்.  பாலஸ்தீனிய மாணவர்களுக்கும் கூட கல்வி பயில் வாய்ப்பும் அளித்திருக்கின்றனர். அந்நாட்டைச் சேர்ந்த  இளைஞர்கள் கூட  இங்கு வேலையும் செய்கின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் மலேசியா, பாலஸ்தீனத்திற்கு  என்ன செய்ய முடியுமோ  அதனைச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.  ஒரு சிறிய நாடு அதற்குமேல் செய்ய ஒன்றுமில்லை.

இந்த நேரத்தில் இப்படி தேவையற்ற முறையில் அவர்களின் துரித உணவகங்களின் மீது கையெறி குண்டுகளை வீசுவதும், அவர்களின் கட்டடங்களைச் சேதப்படுத்துவதும்   ஏற்புடையதல்ல  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அது தான் கெடா, சுங்கை பட்டாணியில்  சமீபத்தில் நடந்த சம்பவம். துரித உணவகமான மெக்டோனால்  விளம்பரப் பலகை  மீதான தாக்குதல்.  பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் வளரவிட முடியாது.  கண்டிப்பது மட்டும் அல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.  அது மட்டும் அல்ல. உணவகங்களுக்குப் போகும்  வாடிக்கையாளர்களைப்  பயமுறுத்துவதும் தண்டனைக்கு உட்பட்டது தான்.

நமது காவல்துறை மீது நமக்கு நம்பிக்கையுண்டு. நல்லது நடக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment