Thursday 4 April 2024

மீண்டும் மாற்றம்!

 

இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அது பிரதமரின் முடிவு என்பதைத்தவிர அது பற்றிப் பேச வேறொன்றுமில்லை.  காரணங்கள் இருக்கலாம். முழுமையான காரணங்கள் பின்னர் வெளியிடப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்தக் காரணங்களைத் தெரிந்து கொள்வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அது பிரதமரின் முடிவு. அது போதும்.

நம்முடைய எண்ணங்கள் எல்லாம் பின்நோக்கிச் செல்கின்றன.  பிரதமர் துறையில் இருந்த போது தான்  அதிகப் பணம் மித்ராவிலிருந்து களவாடப்பட்டன என்பதாகக் கடந்த கால நடப்புகள்  கூறுகின்றன. மீண்டும் அது நடக்காமல் இருக்க வேண்டும். அதன் தலைவர் பிரபாகரன் அதனைக் கவனத்தில் இறுத்திக் கொண்டால் போதும்.

நம்முடைய நோக்கம் எல்லாம்  மித்ரா எதற்காக  ஆரம்பிக்கப்பட்டதோ அதன் நோக்கங்கள் நிறைவேற வேண்டும்.   ஒன்றுமே ஆகவில்ல என்றும் சொல்லிவிட முடியாது.  பயன்பெற்றவர்கள் ஒருசிலராவது இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை என்பதற்காக  ஒரேடியாக குற்றம் சுமத்திவிட முடியாது.

இந்த சமயத்தில் ஒன்றை நினைவுகூர்வது  நல்லது.   மித்ரா பிரதமர்  துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று  முழக்கமிட்டவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.   ஓரளவு பிரதமரை மடக்கி காரியம் சாதித்தார்கள்.  வரவேற்கிறோம்.   அதே சமயத்தில் ஸம்ரி வினோத் காளிமுத்து இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியபோது இவர்கள்  எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?  அப்போது அவர்கள் தங்களின் ஒற்றுமையைக் காட்டவில்லையே!   பிரதமரிடம்  அனைவரும் ஒன்று சேர்ந்து  அது பற்றி விவாதித்திருக்கலாம்.  எதுவுமே செய்யவில்லையே!

இதிலிருந்து நாம் படிக்கும் பாடம் என்ன?  மித்ரா என்றால் வரவு உண்டு.  சிவன் என்றால் செலவு, வரவு இல்லை.  இவர்களின் நடவடிக்கை மூலம் இதைத்தான் நாம் புரிந்து கொள்கிறோம்.  இவர்கள் தான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்!  பாவம்!

மற்றபடி இந்த மாற்றம் நல்லபடியாகவே அமையட்டும்.  இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும்  என்பது இப்போதைக்கு நமக்குத் தெரியவில்லை.  முன்பு என்ன நடந்தது என்பது தெரியும். இப்போது ...?  ஆனால் இன்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன்  மித்ராவில் தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார்.  கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment