மீண்டும் ஆரம்பமாகிவிட்டன மெட்ரிகுலேஷன் மீதான விவாதங்கள்! வழக்கம் போல கல்வி அமைச்சு எதனையும் கண்டு கொள்ளப்போவதில்லை.
கல்வி அமைச்சுக்கு என தனி சட்டதிட்டங்கள். அவர்கள் போக்கில் தான் அவர்கள் போவார்கள். நம்மை மதிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட அவர்களுக்கு இல்லை.
முன்பு தேசிய முன்னணி ஆட்சியில் 1500 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் அது 2200 இடங்களாக உயர்த்தப்பட்டன. இவைகள் எல்லாம் பக்கத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் மறைந்துவிட்டன! உண்மையைச் சொன்னால் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 1500 இடங்கள் கூட இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதுவும் குறிப்பாக டாக்டர் மகாதிர், முகைதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி - இவர்கள் இடைக்காலத்தில் பிரதமராக பதவி வகித்தபோது 1000 இடங்கள் கூட ஒதுக்கப்படவில்லை என்பதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. அதனைக் கண்காணிக்க ஆளில்லையாம்! அதனைக் கண்காணிக்கத் தான் கங்காணிகள் தேவைப்படுகிறார்கள்! கங்காணிகள் இல்லாமல் நமது நாட்டில் எதுவும் அசையாது என்பது இப்போது புரியும்!
ஆமாம் இன்றைய நிலைமை என்ன? அதே நிலைமை தான். புதிதாக ஒன்றுமில்லை!
சமீபத்தில் நாம் கேள்விப்பட்டபடி எஸ்.பி.எம். பரிட்சியில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற 200 இந்திய மாணவர்களுக்கு இடமில்லை என்று கல்வி அமைச்சு கைவிரித்து விட்டதாம்! ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மெட்ரிகுலேஷன் கல்வியின் நோக்கம் என்ன? சீன, இந்திய மாணவர்களுடன் போட்டியிட இயலாத மலாய் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது தான் மெட்ரிகுலேஷன் கல்வி. அவர்கள் நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது. நாம் தான் தகுதி குறைவான மாணவர்களுடன் போட்டி இடுகிறோம். என்ன செய்ய? அதிகத் தகுதிகளுடன் இருப்பது நமது குற்றம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!
ஒன்றே ஒன்றைப் பிடித்துத் தொங்குவதைவிட இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வியைப்பற்றி இந்திய கல்வியாளர் பலர் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவர்களை நாடுவது தான் சிறந்தது. நாம் எதனையுமே நாடி, தேடிப் போவதில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று மெட்ரிகுலேஷன் மட்டும் தான். ஒன்றை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்! வழிகாட்டுதல் இல்லாத சமுதாயமாக இருக்கிறோம். இது கணினி யுகம். தேடுங்கள். உங்களுக்கான ஆயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
சரி இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment