மரவள்ளிக்கிழங்கு என்றாலே இன்றைய தலைமுறையினர் பலருக்கு என்னவென்று கூட தெரியாமல் இருக்கலாம். காரணம் அதனைச் சாப்பிடும் பழக்கம் அற்றுப்போய்விட்டது.
ஆனாலும் பல வகைகளில் அது இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பலகாரங்களாக இப்பவும் கிடைக்கத்தான் செய்கின்றன.
ஜப்பான் காலத்தில் மரவெள்ளி உணவு என்பதெல்லாம் சாதாரணம். அதனை வைத்தே பிழைப்பு நடந்தது. இப்போதும் விவசாய பூமிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நமது நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
நம் நாட்டில் அரிசி பற்றாக்குறை என்று அடிக்கடி பேசப்படுகிற இந்த நேரத்தில் அதற்கு மாற்றாக மரவெள்ளிக்கிழங்கு உற்பத்தியைப் பெருக்க தயாராகுங்கள் என்கிறார் நமது நாடாளுமன்ற சபாநாயகர். அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்பது உண்மையே. என்றாலும் அரிசியை விட்டு மரவெள்ளிக்குத் தாவுங்கள் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டுமே. அவ்வளவு எளிதில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
அதே சமயத்தில் அரிசி உற்பத்தியைப் பெருக்கமாறு கூறியிருந்தால் கேட்க இன்னும் நன்றாக இருந்திருக்கும். மாற்று வகையிலும் வேறு வகையான உணவுகள் தயார் நிலையில் இருப்பது நல்லது என்பது உண்மை தான்.
அரிசி உணவுக்கு நாம் அடிமையாகி விட்டோம். வேறு வகை உணவுகளுக்கு நாம் தயாராக இல்லை. ஊறிப்போன ஒரு பழக்கத்தை விடுங்கள் என்று சொன்னால் அது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. பலவகை உணவு வகைகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வளர்க்கும் பழக்கம் நம்மிடையே இல்லை. பலவகை இறைச்சி வகைகளைக் கொடுப்பது தான் இன்றைய நாகரிகம். இறைச்சி சாப்பிடுபவன் தான் உயர்ந்தவன் என்கிற ஓர் எண்ணத்தை இன்றைய தலைமுறை நம்புகிறது. என்ன செய்வது? அதிகம் படித்ததின் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
மரவெள்ளிக்கிழங்கு ஓர் அற்புதமான உணவு. ஒரே ஒரு தடை என்னவென்றால் அரிசியிலிருந்து அதற்கு மாறுங்கள் என்பதைவிட ஒரு நேரம் மரவெள்ளியைச் சாப்பிட்டுப் பழகுங்கள் என்பது தான் சரி. மரவெள்ளி ஓர் அற்புதமான உணவு என்பதில் சந்தேகமில்லை. என்னைப் போன்றவர்கள் அதைச் சாப்பிடத் தயாராக இருக்கிறோம். இளைய தலைமுறையைச் சாப்பிடத் தயார பண்ணுவது தான் சரியாக இருக்கும்.
என்னவோ ஜப்பான் காலத்துக்குக் கொண்டு போய்விட்டார் சபாநாயகர். இந்த மாற்றம் நடக்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை!
No comments:
Post a Comment