"இந்திய சமுதாயத்திற்கு நான் ஒன்றுமே செய்யவில்லையா?" என இந்தியர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
ஆளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். அதுவும் அரசியல்வாதிளைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
நாம் அதை விடுவோம். நமக்கு முக்கிய குறைபாடு ஒன்று உண்டு. கல்வியை எடுத்துக் கொள்வோம். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செய்த மகா பெரிய காரியம் என்றால் அது மெட்ரிகுலேஷன் கல்வி தான். அவருடைய காலத்தில் சுமார் 2500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஓர் ஆதாரமாக வைத்துத் தான் இன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சென்ற ஆண்டு என்ன நடந்தது? சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான் மெட் ரிகுலேஷன் கல்வி பெற இந்திய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அது மாபெரும் தோல்வி; இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சொல்லப்படுகிறது.
இதனை வைத்துப் பார்க்கும் போது இந்திய மாணவர்கள் கல்வி கற்பதில் பிரதமருக்கு அக்கறை இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. இந்த அளவுக்குக் குறைவான மாணவர்கள் என்றால் ....? பிரதமர் நிறைய செய்திருக்கிறார் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
இந்திய சமுதாயம் பின் தங்கிய சமுதாயம் என்பது பிரதமருக்குத் தெரியும். அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் கல்வி ஒன்றே வழி என்பது பிரதமருக்கே தெரியும். ஆனால் அந்தக் கல்வியை மறுப்புதன் மூலம் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும் என்பதும் பிரதமருக்குத் தெரியும். ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.
அவர் வந்த முதல் ஆண்டே ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மேல் நோக்கிப் போகவில்லை. அவரும் அது பற்றி வாய் திறக்கவில்லை! அப்படி என்றால் அவர் இந்திய சமுதாயத்திற்கு நல்லது செய்வார் என்கிற நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது என்பது தான் உண்மை.
மெட் ரிகுலேஷன் கல்வி ஓர் நீண்ட நாள் பிரச்சனை. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பிரதமரின் கடமை. ஆண்டுக்கு இத்தனை பேர் என்று ஒரு வரையறை வகுத்துவிட்டால் அதன்பின் யாரும் அது பற்றிப் பேசப்போவதில்லை. ஆனால் நிலைமை அப்படி இல்லை.அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள் என்பது தான் பொதுவான கருத்து.
உங்களின் கணிப்புப்படி நீங்கள் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் கல்வியில் கை வைக்கிறீர்களே - அதனால் தான் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது! உங்களைப் போலவே எங்களுக்கும் கல்வி முக்கியம் தான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்>
No comments:
Post a Comment