"அரசியலில் நிரந்தர எதிரியும் இலலை, நிரந்தர நண்பனும் இல்லை" என்பார்கள்.
ஆனால் ம.இ.கா. வைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக நிரந்தர இந்தியர்களின் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள். அந்த எண்ணம் மாற வாய்ப்பிருக்கிறதா? நிச்சயமாக இப்போது இல்லை!
ஆளுங்கட்சியில் ஓர் அங்கம் என்பதால் ம.இ.கா.வை கோலகுபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைப்பது இயல்பு தான். ஆனால் ம.இ.கா. பிரச்சாரத்திற்கு வருவதால் வரவேற்பு எப்படி இருக்கும்? நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கப் போவதில்லை! மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி இப்போது 'இந்தியர் நலனுக்காக' வந்து பிரச்சாரம் செய்தால் அது எடுபடுமா? ம.இ.கா. வந்தாலே மக்கள் எட்டிப் போவார்கள் என்பது தான் உண்மை.
பிரதமர் பதவி ஏற்கும் வரை டத்தோஸ்ரீ அன்வார், ம.இ.கா.வைப் பற்றிய அவரது நிலைப்பாடு என்ன என்பது அவருக்கும் தெரியும்; நமக்கும் தெரியும். இப்போதும் இந்தியர்களின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை. இந்த நிலையில் இவர்களின் பிரச்சாரத்தை இந்தியர்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள்? வரவேற்பு கிடைக்குமா? வெறுப்பேற்பு கிடைக்குமா?
இவர்கள் பிரச்சாரம் செய்வதால் அது ம.இ.கா.வுக்கு நல்லதாக இருக்கலாம். காரணம் அவர்கள் இந்தியர்களை நெருங்குவதற்கு அது ஒரு காரணமாக அமையும். ஆனால் இந்திய மக்களின் மனநிலை என்ன? அந்த அறுபது ஆண்டு கால அவலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். அவ்வளவு எளிதில் ம.இ.கா.வின் கடந்தகாலத் துரோகங்களை மறந்துவிட முடியுமா?
ம.இ.கா.வைப் பிரச்சாரத்திற்கு அழைப்பது பி.கே.ஆர். கட்சிக்கு எப்படிப் பார்த்தாலும் நன்மை பயக்காது. அது பக்காத்தான் கூட்டணிக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்துமே தவிர நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை.
பிரதமரின் கூட்டணி இப்போது இந்தியரிடையே சரியான அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ம.இ.கா. வை அழைப்பது அது இன்னும் அடி வாங்கும் நிலைக்குத்தான் போகும்!
என்ன செய்வது? இது தான் அரசியல்! இதனைத் தான் அரசியல் சாணக்கியம் என்கிறார்கள்! இதற்குச் சாணி அள்ளப்போகலாம்!
No comments:
Post a Comment