எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பூனை கண்ணைத் திறந்திருக்கிறது! இத்தனை ஆண்டுகள் கண்ணை மூடிக் கொண்டிருந்ததால் நாட்டில் இலஞ்சம், ஊழல் எதுவுமில்லை! ஜாக்கிம் போன்ற அமைப்புகளுக்கு 'கல்வத்' தவிர அப்படி ஒன்றும் தலைபோகும் காரியம் ஒன்றுமில்லை!
ஆனால் இப்போது தான் பூனை கண்ணைத் திறந்திருக்கிறது. ஐயோ! ஐயோ! என்று அலறுகிறது! பிரதமர் அன்வாருக்கு நன்றி!
'அந்தப் பெரிய மனுஷன் இலஞ்சம் வாங்கினான்! இந்தப் பெரிய மனுஷன் இலஞ்சம் வாங்கினான்!' என்கிற சத்தம் பலமாகக் கேட்கிறது. 'அந்த சாக்ஸில் ஓட்டை! இந்த சப்பாத்தில ஓட்டை!' என்கிற சத்தம் இங்கும் பலமாகக் கேட்கிறது. இனி கடைகளில் விற்பனையாகும் அத்தனைச் சப்பாத்துகளும் துருவி துருவி ஆராயப்படும் என நம்பலாம்! அதே போல பேரங்காடிகளில் விற்பனையாகும் அனைத்துப் பொருள்களும் நுணுகி நுணுகி மேயப்படும் எனவும் நம்பலாம்!
புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தி: ஏன் இத்தனை ஆண்டுகள் இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது தான். பிரச்சனை என்னவென்றால் இவர்கள் தான் அத்தனைக்கும் காரணமாக இருந்தவர்கள்! அதனால் யார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? உயர் பதவிகளில் இருந்து கொண்டு அத்தனை அட்டுழியுங்கள், அக்குறும்புகள் செய்தவர்கள் இவர்கள் தான்!
இப்போது பிரதமர் அன்வாரே இலஞ்ச லாவண்யங்களுக்கு எதிராக இருப்பதால் ஒவ்வொன்றும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது! பிரதமர் எதைச் செயதாரோ இல்லையோ "லஞ்சத்தை ஒழிப்பேன்" என்று சொன்னாரே அது போதும். நாடு முன்னேற வேண்டுமானால் இலஞ்சம், ஊழல், வேலை தெரியாத அரசாங்க ஊழியர்கள், சோம்பித் திரியும் ஊழியர்கள் இவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும்!
இலஞ்ச ஊழல் ஆணையம் இத்தனை ஆண்டுகள் பட்டும் படாமலும் செயல்பட்டுக் கொண்டிருந்தது! இப்போது தான் அவர்களுக்கும் நேரம் காலம் கூடிவந்திருக்கிறது. மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல பெரிய மீன்களுக்கும் பெரிய வலைகளைப் போட்டுப் பிடிக்க வேண்டும்! சிறிய மீன்களால் சராசரி மனிதனுக்குக் கஷ்ட காலம். பெரிய மீன்களால் நாட்டுக்கே கஷ்ட காலம்!
எங்கெங்கோ ஒளிந்து கொண்டிருந்த சுயநலப்பேய்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் ஆணையத்திற்கும், பிரதமர் அன்வார் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment