Thursday 18 April 2024

அசிங்கப்படுத்தாதீர்கள்!

 

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  நமது இந்திய குடும்பங்கள் பல்வேறு  துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  சுருக்கமாகச் சொன்னால்:  வேலையில்லா திண்டாட்டம்.

பல பெண்களுக்கு வெளியூர் போய் வேலை செய்ய இயலாத நிலைமை. அதனால் வீட்டு அருகிலேயே  எதையாவது செய்து பிழைக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.  அதன் காரணமாகத்தான்  ஆங்காங்கே சிறு சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர்.  ஒரு கட்டாயச் சூழல் தான் அவர்களை  இந்த நிலைக்குத் தள்ளியது.  கட்டாயம் என்று சொன்னாலும்  தாங்கள் செய்த வேலையைவிட  இங்கு நிலைமை இன்னும் நன்றாக இருப்பதையும் புரிந்து கொண்டார்கள்.

இந்திய சமூக மகளிர் இது போன்று சிறு சிறு சாலை ஓர வியாபாரங்கள் செய்வதை  நாம் வரவேற்கிறோம்.  சீன இனப் பெண்கள் இது போன்ற வியாபாரங்களைப்   பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர்.  அதனால் தான்  சீனர்களின்  பொருளாதார பலத்தோடு  நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் சகோதரி ஒருவர் ஒரு புகாரை மக்கள் முன்பாகக் கொண்டு வந்திருந்தார். சிலர்  டிக்டாக்கில்  இது போன்ற சிறு வியாபாரங்களைச் செய்யும் சகோதரிகளைப் பேட்டி எடுப்பதும், அவர்களின் உணவுகளைப் பற்றி தரமற்று இருப்பதாக  சொல்லுவதும் = iஇது போன்ற அவதூறு செய்திகளைப்பரப்ப வேண்டாம் என்று அவர் குமுறியிருந்தார்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உணவுகளை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் பெரிய பெரிய உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்யுங்கள்.  பெரிய நிறுவனங்கள் என்றால் பலதரப்பட்ட மக்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.  அந்த விமர்சனங்களைப் பார்த்து அங்கு செல்வோரும் உண்டு.  உண்மையில் சமீபத்தில் நாட்டிற்குள் புதிதாக  நுழைந்த  சில  பன்னாட்டு உணவகங்கள் தரமற்று தான் இருக்கின்றன.  ஏன் விமர்சனம் செய்வதில்லை?

இவைகளையெல்லாம் விட்டுவிட்டு  சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நம் இன சகோதரிகளைச் சிறுமைப்படுத்துவது  இரக்கமற்ற செயல்.  யார் கண்டார்? நாளை ஒரு வேளை உங்களுக்கும் இது போன்ற சூழல்கள் வரலாம்.  குடும்பத்தைக் காப்பாற்றவது கட்டாயம் என்கிற நிலை ஏற்படும்போது யாரும் இது போன்ற சிறிய வியாபாரங்களுக்கு வரத்தான் செய்வார்கள்.  அவர்களைக்  கேலி, கிண்டல்கள் செய்து  மனதைப் புண்படுத்துவது  இரக்கமற்றது என்பதைத் தவிர  வேறு என்னவென்பது?

அவர்களைக் கேலி செய்வது நம்மை நாமே அசிங்கப்படுத்துவது தான்!

No comments:

Post a Comment