வெகு விரைவில் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத் தேர்தலில் ஜ.செ.க. வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்படுகிறது. அதனால் இந்தியத் தலைவர்களின் குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது!
ஆனால் அவர்கள் தலைவர்களா தறுதலைகளா என்றும் ஊகிக்க முடியவில்லை. தலைவர்கள் என்றால் "எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்!" என்பார்கள். தறுதலைகள் தேர்தலை புறக்கணியுங்கள்!! என்பார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. புறக்கணியுங்கள் என்று சொல்பவர்கள் துரோகிகள்.
நமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு வாக்களிப்பதன் மூலமே காட்டுவதற்கு வழி உண்டு. அது தான் ஜனநாயகம். புறக்கணியுங்கள் என்று சொல்லுவது கீழறுப்புவாதிகள். இனத் துரோகிகள். அவர்களின் சுயநலத்திற்காக எதையும் பேசுவார்கள். முதலில் புறக்கணியுங்கள் என்று பேசுபவர்கள் "நாம் படிக்காத சமுதாயம்!" என்று மெய்பிக்க நினைப்பவர்கள்.
நடைபெறும் இந்த இடைத் தேர்தல் நாடாளுமன்றத்திற்கானது அல்ல. அது பிரதமர் அன்வாரின் பலத்தைக் கூட்டுவதோ குறைக்கவோ செய்யாது. அது சட்டமன்றத் தொகுதிக்கான ஓர் இடைத்தேர்தல்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் இது பற்றி கொஞ்சம் சிரத்தை எடுத்து சிந்திக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவரை - இந்தியர்களைப் பொறுத்தவரை - நல்ல பல காரியங்களை சிலாங்கூர் அரசாங்கம் செய்திருக்கின்றது. குறிப்பாக கல்வி சம்பந்தமான உதவிகள் நிறையவே கிடைத்திருக்கின்றது. பள்ளி பேரூந்து கட்டணங்கள், உயர்கல்வி நிதி, இறந்தவர்கள் அடக்கம் செய்ய நிதி - இப்படிப் பல உதவிகள் இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அதனை மறுப்பார் இல்லை. மற்ற மாநிலங்களில் இவைகள் கிடைத்திருக்கின்றனவா என்று யோசித்துப் பாருங்கள்.
இவ்வளவு செய்திருந்தும் அதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால் யாருக்கு வாக்களிப்பது என்று நீங்களே முடிவு எடுக்கலாம். அதற்காக புறக்கணிப்பைச் செய்யாதீர்கள். இரண்டு கட்சிகள் தான் போட்டியிடுகின்றன. யாரால் உங்களுக்கு இலாபம் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள்.
தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்லுபவர்களப் புறக்கணியுங்கள். புறக்கணிப்பு தேவையற்றது. நமது உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம்.
No comments:
Post a Comment