Wednesday 17 April 2024

தொழிலாளர் பற்றாக்குறை!


 தொழிலாளர் பற்றாக்குறை என்பது இன்று நாட்டில் அடிக்கடி  பேசப்படுகிற  ஒரு விஷயமாக மாறிவிட்டது.  அதே சமயத்தில் உள்ளூர் மக்கள் வேலை இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போகிற ஒரு கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டில் பேரங்காடிகளில் முழுநேர வேலை, பகுதி நேர வேலை  என்று பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.  இப்போது அவைகளெல்லாம்  உள்ளூர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வெளிநாட்டவர்க்குப் போய்விட்டன.   அதற்குப் பல காரணங்கள் முதலாளிகளால் தொடர்ந்து ண்டுபிடிக்கப்படுகின்றன.

நமது சிகையலங்காரக் கடைகளில் தொடர்ந்தாற் போல ஆள் பற்றாக்குறை  என்பதாகச் சொல்லப்படுகிறது.  பற்றாக்குறை என்று  சொல்லுவது எளிது. ஆனால் அவர்களை வேலைக்கு வைக்கும் போது  அவர்களின் நலனைப்பற்றி  கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை.  அவர்களுக்கு ஒழுங்கான முறையில் சம்பளம் கொடுப்பதில்லை.  கொஞ்சம்  ஏமாந்தவனாக இருந்தால் அவனை மிரட்டிப் பார்ப்பது - இவைகளை எல்லாம் செய்துவிட்டு  ஆள் பாற்றாக்குறை என்று அரசாங்கத்திடம் மனு கொடுப்பது!

கொரோனா பெருந்தொற்று காலத்தில்  வேலை செய்தார்களே அந்தத் தொழிலாளர்களை அவர்கள் கவனித்தார்களா?   அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத் தொழிலாளர்கள்.   அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும்  சாப்பாடாவது கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.  ஆனால் எதனையும் அவர்கள் செய்யவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு  நிலையத்தில் இருவருக்கு இந்த நிலை.  சம்பந்தமில்லாதவர்கள் தான் உதவி செய்ய வேண்டி வந்தது!

வேலைக்கு ஆளில்லை என்கிற குறை ஒரு பக்கம்.  இதோ வங்காளதேசிகள் ஆங்காங்கே  முடிவெட்டும் கடைகளை ஆரம்பிக்கின்றனர்.    உங்களுக்கோ ஆளில்லை என்கிற குறை.  அவர்களோ எந்தக் கவலையும் இல்லாமல் தொழிலைச் செய்கின்றனர். எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை!

போகிற போக்கில் ஆள் பற்றாக்குறை  என்று சொல்லி முணகிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!  வங்காளதேசிகள் இந்தத் தொழிலையும்  தங்களது கட்டுப்பாட்டில்  கொண்டுவந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது!

செய்கின்ற தொழிலையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள், நண்பர்களே!

No comments:

Post a Comment