வருகின்ற கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்காளர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க ஏற்ற நேரம் அல்ல என்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
அதில் நமக்கு உடன்பாடு இல்லை. அறுபது ஆண்டு காலம் பொறுத்தவர்கள் இன்னும் ஒருசில தினங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதா என்று கேட்பதில் அர்த்தமில்லை.
"பொறுத்தது போதும்! பொங்கி எழுங்கள்!" என்பது இன்றைய அவசரம். ஏமாந்து ஏமாந்து, பொறுத்துப் பொறுத்து, ஏமாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டு, கட்சியால் ஏமாற்றப்பட்டு, தலைவர்களால் ஏமாற்றப்பட்டு - இப்போது தான் நமக்கு அந்த ஏமாற்றத்திலிருந்து எழவேண்டும் என்கிற விழிப்புணர்வே ஏற்பட்டிருக்கிறது.
நமது அதிருப்தியைத் தெரிவிக்க எந்த ஒரு வழியும் இல்லாத போது நமது கடைசி ஆயுதம் தான் வாக்குச்சீட்டு. அதனை நாம் இப்போது பயன்படுத்தலாமே. நம் அதிருப்தியைக் காட்டலாமே. நீண்ட நாள்களாக அந்தத் தொகுதியில் உள்ள ஒரு பிரச்சனை. வீடமைப்புத் திட்டம் என சொல்லப்படுகிறது. அதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் தீர்க்கப்படாமலேயே போய்விட்டது என்கிறார்கள். பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ள அந்தப் பிரச்சனையை இப்போது ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில் என்ன பிரச்சனை? இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
இடைத் தேர்தல் சமயத்தில் சாலைகள் சீரமைப்பு, பள்ளிகளைப் பராமரித்தல், கோவில்களைப் புதுப்பித்தல், உணவு பொட்டலங்கள் வழங்குதல் - இப்படி கேட்காமலேயே வேலைகள் நடக்கின்றனவே! அந்த குடுகுடு வேலைகளுடன் இந்த வீடமைப்பு வேலையையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். இதில் புதிதாக ஆரம்பிக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே எல்லாமே தயாராகத்தானே உள்ளன?
இத்தனை ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் அரசாங்கம் நம்மை மனிதர்களாகக்கூட மதிக்கவில்லை என்பதுதான். அதனால் இந்த நேரத்தில் இது போன்ற நெருக்குதல்கள் தேவையே. வேறு என்ன செய்ய?
வாக்காளர் பெருமக்களே! யாருக்க வாக்களிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தான் தெரியும். இதுவே ஏற்ற தருணம்! இது ஏற்ற தருணம் அல்ல என்று யாரும் சொன்னால் அவர்களை உங்களுக்கு வீடு வாங்கி தரச் சொல்லுங்கள்! ஏன்? உணவு பொட்டலங்கள் தரும் போது வீடு வாங்கித்தர முடியாதா?
No comments:
Post a Comment