அமானா இக்தியார் மலேசியா என்னும் பெயரை அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம். ஏதோ மலாய் பெண்களுக்கான ஓர் அமைப்பு. நிதி உதவி பெற அவர்களுக்குப் பல்வேறு அரசாங்க அமைப்புகள் இருப்பது போல அதில் இதுவும் ஒன்று என்று தான் தெரியுமே தவிர இந்த அமைப்பின் மூலம் இந்தியப் பெண்களும் பயன் பெறலாம் என்பது இப்போது தான் டத்தோ ரமணன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
ஏற்கனவே நமது மகளிர் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று அதனைப் பிரபலப்படுத்தியவர் டத்தோ ரமணன் அவர்கள் தான். இப்போதைய மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய மகளிர் வணிகர்களுக்காக அமானா இக்தியார் சுமார் 50 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒன்றை நாம் மறந்திவிடக் கூடாது. செய்திகள் வெளியாகிவிட்டன என்பதற்காக அனைத்தும் சுமூகமாக முடிந்துவிட்டன என்று நினைத்துவிடக் கூடாது. யாரும் தங்கத்தட்டில் பரிமாறப் போவதில்லை. காலை நீட்டி உட்கார்ந்து கொண்டிருந்தால் எதுவும் நம்மைத் தேடி வராது. முயற்சிகள் நம்முடையதாக இருக்க வேண்டும். அதனால் என்ன? எங்கெங்கோ சுற்றுகிறோம், சுழல்கிறோம்! இதற்கும் ஒரு முயற்சி எடுத்து 'ஒரு கை பார்த்துவிடுவோமே!' என்கிற சவடால் தனத்தோடு களத்தில் இறங்க வேண்டும். பயம், தயக்கம அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு துணிச்சலோடு காரியம் சாதிக்க வேண்டும்.
டத்தோ ரமணன் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். இந்த அமைப்புக்கு நாடு முழுவதிலும் அலுவலகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிக முக்கியம் அந்த அலுவலகங்களில் தமிழ் தெரிந்த ஒருவர் வேலையில் இருக்க வேண்டும். அது தான் நமது பெண்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். கொஞ்சம் தாராளமாகப் பேசுவார்கள். வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்வார்கள்.
சிறு வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் அல்லது ஈடுபடப்போகும் நமது பெண்களுக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நமது பிரதமருக்கு நன்றி. எப்போதும் மித்ரா! மித்ரா! என்று கூவிக் கொண்டிருந்த நமக்கு மித்ரா ம்ட்டும் அல்ல இன்னும் ஏகப்பட்ட அமைப்புகள் அரசாங்கத்தில் உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் டத்தோ ரமணன்.
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? வாழ்த்துகள்!
No comments:
Post a Comment