Monday 8 April 2024

அலட்சியமாக ஓட்ட வேண்டாம்!

 

பெருநாள் நெருங்கிவிட்டது.  பெருநாள் வாழ்த்துகள் கூறும் இந்த நேரத்தில் உங்களுடைய வாகனங்களைப் பார்த்துப் பயன்படுத்தங்கள் என்பது தான் நமது அறிவுரை.

பெருநாள் காலங்களில் பெரும்பாலானோர் தூரத்துப் பயணங்களை  மேற்கொள்கிறீர்கள்.  வீடு போய் பெற்றோர்களைப் பார்க்க வேண்டும், உறவுகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை  அனைவருக்கும் உண்டு. அதில் ஒன்றும் தவறில்லை. வருடத்திற்கு ஒரு முறை தான் பார்க்க இயலும். அதனைத் தவற விடக்கூடாது என்பது தான் நம் அனைவரின் ஆசை.

எது எப்படி இருந்தாலும் கார்களில் பயணிக்கும் போது, நீங்கள் மட்டும் அல்ல,  உங்கள் குடும்ப உறுப்பினர்களும் காரில் பயணிக்கலாம். அனைவரின் பாதுகாப்பும்  முக்கியம்.  மிகவும் எச்சரிக்கை உணர்வோடு தான்  காரைச் செலுத்த வேண்டும்.  நாம் சரியாகப் போனாலும் எதிரே வருபவன்  என்ன நிலையில் இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாது.  குடிகாரனாக இருக்கலாம், கஞ்சா அடிப்பவனாக இருக்கலாம், கடன்காரனாக இருக்கலாம் - யார் வேண்டுமானாலும் கார் ஓட்டலாம்! அனைத்தையும்  சமாளிக்கக் கூடிய  திறன் நமக்கு இருக்க வேண்டும்.  வேறு வழியில்லை! 

ஊடகச் செய்திகளைப் பார்க்கும் போது  நமக்கே அச்சத்தைக்  கொடுக்கின்றன.   அந்த அளவுக்கு விபத்துகள் நடக்கின்றன.  ஒவ்வொரு விபத்திலும் ஒட்டுநர் மட்டும் அல்ல குழந்தைகள், பெரியவர்கள்  என்று பலர் மரணிக்கின்றனர்.  அதைப் படிக்கும் போது  மனத்தையே கலக்கி விடுகிறது.

யாரைப் பழி சொல்லுவது?  அலட்சியமாக ஓட்டுபவர்கள்  மீது கடுமையானத் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்  என்று  மட்டும் தான் நம்மால் சொல்ல முடியும்.  தண்டனைக் கடுமையாக இல்லையென்றால்  விபத்துகளைத் தடுக்க முடியாது.

விபத்துகள் குறைவான நாடு என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?  விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரின் சொத்துகளையே முடக்கிவிடுவார்களாம்!  அது தான் சரியான தண்டனையாக இருக்க முடியும்!  

நம நாட்டில் பணத்தைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்க முடியும் என்கிற நிலை இருந்தால்  விபத்துகளை குறைக்க முடியாது என்பது நிச்சயம்!

உங்களின் பயணம் நல்லபடியாக அமையட்டும்!

No comments:

Post a Comment