Sunday 16 December 2018

பணம் விளையாடுகிறதோ...!

இப்போது மழை காலம்.  பூமி குளிர்ந்து விட்டது. ஆனாலும் நமது நாட்டை இத்தனை ஆண்டுகள் கிடுக்குப் பிடியில் வைத்திருந்த அம்னோவுக்கு இப்போது இலையுதிர் காலம்!  ஒன்று ஒன்றாக, கொத்துக் கொத்தாக உதிர்ந்து கொண்டு ஒரு  சில அரசியல்வாதிகளுக்கு  உஷ்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!

அம்னோ அரசியல்வாதிகள் பெரும்பாலோர் டாக்டர் மகாதிரின் தலைமையில் இயங்கும் பெர்சத்து கட்சியில் இணைய ஆர்வம் காட்டுகிறார்கள் என்னும் செய்தியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில்  வாசித்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரத்தில் அம்னோ கூடாரம் காலியாகி விடும் என்னும் அச்சத்தில் அம்னோவின் இன்றைய நிலைமை!

இந்நிலையில் பண அரசியல் தான் இந்த நிலைக்குக் காரணம் என்று அம்னோ தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின்றன. அப்படியானால் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யுங்கள் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்கிறார் ஆணையத்தின் தலைவர். நிச்சயம் ஊழல் தடுப்பு ஆணையம் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என  நம்பலாம்.

இந்த நேரத்தில் நமக்கும் ஒரு கேள்வி எழுகிறது. யார் யாருக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்னும் கேள்வி!  

பெர்சத்து புதிதாக நடந்து முடிந்த தேர்தலின் போது ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி. அவர்களிடம் பண இருப்பு என்பதெல்லாம் வெறு சுழியமாகத்தான் இருக்க முடியும்! அதே சமயத்தில் அம்னோ  கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு கட்சி! பெர்சத்து பணம் கொடுக்க வழியில்லை. ஒரு வேளை அம்னோவில் உள்ளவர்களே பணம் கொடுத்து பெர்சத்துவில் சேர ஊக்குவிக்கப் படுகிறார்களோ!  இது அரசியல்! அரசியல்வாதிகள் படு பயங்கரமான மனிதர்கள்! அவர்கள் திட்டம் என்ன என்பதை சராசரியான நமக்குப் புரியாதது. அது தான் அவ்ர்களின் பலம்!

அதனால் நம்மைப் போன்ற கள்ள அரசியல் அறியாதார் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்த கொள்ள கொஞ்சம் சிரமம் தான்! செய்திகள் கசியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பணம் விளையாடுகிறது என்பது உண்மை! யார் பணம் கொடுத்தால் என்ன அவன் கொடுத்தானா, இவன் கொடுத்தானா என்பதை விட அது அவன் அப்பன் வீட்டுப் பணம் இல்லை என்பது மட்டும் உண்மை! அது நம் அப்பன் வீட்டுப் பணம் ! அதனால் நாம் தெரிந்து கொள்ள எல்லா உரிமையும் உண்டு.

பொறுத்திருப்போம்.  பண விளையாட்டை ரசிப்போம்!

No comments:

Post a Comment