Sunday 23 December 2018

இத்தனை ஆண்டுகளாக இப்படித்தானா...!

மிளகாய்கள் பற்றியான ஒரு செய்தி உடம்பெல்லாம் எரிச்சலை உண்டாக்குகிறது!

ஆமாம்,  இப்போது தான் சுகாதார அமைச்சு கண்டுப் பிடித்திருக்கிறது!  நாட்டிற்குள் விற்கப்படும் 21 வகையான - வெளிநாடுகளிலிருந்து வரும் மிளகாய்கள் - உண்பதற்கு ஏற்றவை அல்ல என்கின்ற உண்மை இப்போது தான் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு வந்திருக்கிறது! 

அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்துவதால் வருகின்ற ஆரோயக்கியமற்ற பிரச்சனை இது! இந்த ஓரு ஆண்டாகத் தான் சுகாதார அமைச்சு  இதனை ஆய்வு செய்ய ஆரம்பித்திருக்கிறது! 

வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மிளகாய் வகைகள் மட்டும் அல்ல அனைத்து வகையான மரக்கறிகளும் நமது நாட்டு சட்டத்திற்கு உட்பட்டவைகள் தான்.  அவைகள் உள் நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி, வெளி நாட்டு இறக்குமதியாக இருந்தாலும் சரி அவைகளின் தரம் பார்த்து மலேசியர்கள்  உட்கொள்ள ஏற்றவைகள்  தானா என்கின்ற தரம் பார்த்து பிரிப்பது சுகாதார அமைச்சின் கடமை.

சுகாதார அமைச்சு சுமார் 503 வகையான  மிளகாய்களை ஆய்வு செய்ததில்  அதில் 21 வகைகள் மிகவும் கெடுதலானவை என்கிற உண்மையைக் கண்டுப்  பிடித்திருக்கிறது.  இந்த 21 வகைகளைத் தவிர்த்து மற்றவை நமது உணவுக்கு ஏற்றவை என்பதாக அமைச்சு கூறுகிறது.

நம்மிடையே உள்ள ஒரு கேள்வி. இந்த ஆய்வு என்பது எல்லாக் காலங்களில் உள்ள ஓர் ஆய்வு தான்.  இந்த ஆண்டு ஜனவரி முதல் என்று ஏன் சுகாதார அமைச்சு கூறுகிறது? அப்படி என்றால் இதற்கு முன்னர் எந்த ஆய்வையும் அமைச்சு மேற்கொள்ளவில்லையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை!  அது அவர்களின் கடமை என்பதால் அந்த ஆய்வுகள் வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கும்.

ஆனால் ஒன்று சொல்லலாம். வழக்கமாகச் சொல்லப்படுவது தான்.  ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும் 'தள்ளுவது' முன்னுக்குத் தள்ளப்படுவதும்  இருக்கலாம். முன்பு அப்படி நடக்கும் என்பது  அனைவரும் அறிந்தது தான்! 

உண்மையைச் சொன்னால் நாம்  சுகாதாரமற்றக்  காய்கறிகளைப் பல ஆண்டுகளாக சாப்பிட்டுக் கொண்டு தான் வருகிறோம். அதில் மிள்காயும் அடங்கும்! அவ்வளவு தான்.இப்போது ஏதோ ஒன்று அவர்களை உண்மைகளைச் சொல்ல வைக்கிறது. அதனால் அவர்கள் சொல்லுகிறார்கள்!

இனி மேல் சுகாதாரமான காய்கறிகளையோ அல்லது மிளகாய்களையோ  மலேசியர்கள்  சாப்பிட முடியும் என நம்பலாம்.

கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment