Friday 21 December 2018

கூட்டுச் சதியா..?

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்லுவது ஒரு கூட்டுச் சதியாகவே நாம் நினைக்க வேண்டியுள்ளது.

இந்த விலகல் கோரிக்கை மலாய் அரசியல்வாதிகளிடமிருந்தே  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பாஸ் கட்சியினர். அதனைத் தொடர்ந்து அம்னோ கட்சியினர். இன்னும் தொடர்ந்து பக்கத்தானிலுள்ள மலாய் அரசியல்வாதிகள்!

அது ஏன் மலாய் அரசியல்வாதிகள்? இந்தியர்களுக்கு எல்லாத் துறையிலும் சம பங்கு என்பதை ஏற்க இயலா மலாய் அரசியல்வாதிகள் ஏன்?  ஆமாம், முந்தைய ஆட்சியில் ம.இ.கா. செய்த துரோகத்தால் ஒரு அமைச்சர், ஒரு துணை அமைச்சர். அது மட்டும் போதும் என்றது ம.இ.கா.  எங்களுக்கும் மகிழ்ச்சி என்றது பாரிசான்! நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்கப் போவதில்லை என்றது அம்னோ! 

ஆனால் அந்த நிலைமையை மாற்றி அமைத்தார் பிரதமர் டாக்டர் மகாதிர். காரணம் உண்டு. எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்திருந்தார்கள்.  இந்தியர்களின் வாக்குகளைக் கவர பி.வேதமூர்த்தி பெரும் பங்காற்றியிருந்தார்.  அதே சமயத்தில் பக்கத்தானை ஆதரித்த மலாய்க்காரர்கள் சுமார் இருபத்தைந்து விழுக்காட்டினர்!

பக்காத்தானை ஆதரித்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அத்தோடு வேதமூர்த்தியோடு ஓர் ஒப்பந்தத்தையும் பிரதமர் கையெழுத்திட்டிருக்கிறார். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் தேவைகள் என்ன என்பதே அந்த ஒப்பந்தம். அவைகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்றார் பிரதமர்.

யாரும் எதிர்ப்பாராத நிலையில் பக்கத்தான் பதவி ஏற்றது. அத்தோடு டாக்டர் மகாதிர் பிரதமராகப் பதவி ஏற்றார். இன்று வேதமூர்த்தி அமைச்சராக இருக்கிறார் என்றால் அவர் இந்தியர்களின் பிரச்சனையை நன்கு அறிந்தவர் என்பதால் தான். அதனால் தான் பிரதமர் இந்தியர்களின் நலனுக்காக வேதமூர்த்தியைப் பதவியில் அமர்த்தினார்.

இந்தியர்களைப் பொறுத்தவரை அவரது பணி சிறப்பாகவே உள்ளது. அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

ஆனால் இந்த மலாய் அரசியல்வாதிகள் இந்தியர்களுக்கு இத்தனை அமைச்சர்களா என்று தான் சிந்திக்கிறர்களே தவிர இந்தியர்களின் நிலையை அவர்கள் உணர மறுக்கிறர்கள்.

ஆமாம்! இந்த அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் நாங்கள்.  நாடாளுமன்றத்திற்கு எங்களது பங்கு அதிகம். அறுபத்தைந்து தொகுதிகள் எங்களை நம்பி உள்ளன! அதனால் நான்கு அமைச்சர்கள் என்பது அதிகம் அல்ல!

இதனை பொறாமைக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. மலாய்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று சொல்லுவதைப் பார்க்கும் போது இது மலாய்த் தலைவர்களின் கூட்டுச்சதி என்றே நம்மால் பார்க்க முடிகிறது! 

இல்லை! நாங்கள் இன்னொரு பாரிசான் அரசாங்கத்தை விரும்பவில்லை! பக்காத்தான் அரசாங்கம் விவேகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வேதமூர்த்தி தனது பணிகளைச் செவ்வனே செய்ய அவர் பணியில் தொடர வேண்டும்.

இந்த மலாய் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதியைத் தகர்க்க வேண்டும்! மலாய் அரசியல்வாதிகள் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.

எங்கள் உரிமைகள் மீது கைவைப்பதை  நிறுத்த வேண்டும். இது ஒரு கூட்டுச் சதி. அதனை முறியடிப்போம்!

No comments:

Post a Comment