யார் என்ன சொன்னாலும் சரி. சைட் சாதிக்கிடம் நல்லதொரு கொள்கை உண்டு! பெர்சாத்துவின் இளைஞர் பிரிவு தலைவரான அவரிடம் "தில்" கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது!
நம் ம.இ.கா. வை நினைத்துப் பாருங்கள். இளைஞர் பிரிவு தலைவர் பேசுவதற்கு ஏதேனும் உண்டா? பேசுவாரா? பேச முடியுமா? தலைவருக்கு தலையாட்டுவதை விட அவருக்கு வேறு என்ன வேலை!
இருந்தாலும் சைட் சாதிக்கிடம் இளம் வயது இரும்புத்தனம், இளம் கன்றுத்தனம் எல்லாம் உண்டு. அவர் ஒருவர் தான் பயமறியாத கன்றுவாக இருக்கிறார்! வாழ்த்துவோம்!
இன்றைய அரசியலில் நீதி, நியாயம் பேச இடமில்லை! அரசியலில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஆனால் அவர் துணிவாக பேசுகிறார். அதுவும் பிரதமர் மகாதிர் அமைச்சரவையில் அவரால் அப்படி பேச முடிகிறது என்றால் அதனை நாம் பாராட்ட வேண்டும்.
அது சரி, பிரதமர் என்ன நினைக்கிறார்? வெளியே , வெளிப்படையாக அவர் எந்தக் கருத்தையும் சொல்லுவதில்லை என்றாலும் உள்ளுக்குள்ளே அவர் வரவேற்கிறார்! அப்படி பேசுவதற்கு மலாய் சமூகத்தில் ஓர் ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்!
இன்று மலாய் அரசியல்வாதிகள் இலஞ்சம், ஊழல் என்று வரும் போது முதல் தர ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்! அதுவும் குறிப்பாக இப்போது அம்னோ கட்சியில் இருந்து கட்சி தாவும் அரசியல்வாதிகள் பற்றி எதனையும் சொல்ல முடியவில்லை! அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்! அவர்களிடம் நீதி, நேர்மை என்பதெல்லாம் எப்போதோ போய்விட்டது! அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டுத் தான் கட்சி மாறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது!
சைட் சாதிக் ஒரு நல்ல கருத்தைச் சொல்லுகிறார். "வாருங்கள்! உங்களுடைய சொத்து விபரங்களை அறிவித்துவிட்டு வாருங்கள்! மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்! தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நமது கலாச்சாரப் பண்புகளுக்குக் குழி தோண்டாதீர்கள்! நீங்கள் பெர்சாத்துவால் ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்னர் கட்சியின் நிபந்தனைகளை நன்கு அறிந்த பின்னர் வாருங்கள்!"
சாதிக் சொன்னது சரிதான். பெர்சாத்து என்பது மலேசிய அரசியலில் ஓரு புதிய பரிணாமம். அம்னோவில் உள்ள கழிசடைகளை இங்கு சேர்த்து இந்தக் கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கக் கூடாது!
சாதிக்! நீங்கள் சொல்லுவது சரியே! உங்கள் பதவியில் நீங்கள் தொடர எனது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment