நாடற்றவர் பிரச்சனை கேட்பாரற்று, நாதியற்றுப் போனதா என்கிறார் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ!
ஆமாம்! அதைத்தான் நாமும் கேட்கிறோம். ஏழு மாதங்கள் ஆகிவிட்ட பின்னரும் இந்தப் பிரச்சனையைப் பற்றி கப்சிப் என்றிருக்கின்றனர் பிரச்சனையை முடித்து வைக்கும் நிலையில் இருப்போர். நூறு நாளில் முடித்து வைப்போம் என்பது தேர்தல் உறுதி மொழி. இது நாள் வரை எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை! என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதும் புரியவில்லை. என்ன தான் நடக்கிறது என்பதும் புரியவில்லை!
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். இருக்கட்டும். நாட்டில் பிரச்சனைகள் இல்லாவிட்டால் பழைய அரசாங்கத்தை நாம் ஏன் தூக்கி எறிகிறோம்? புதிய அரசாங்கத்தை ஏன் சிம்மாசனத்தில் ஏற்றுகிறோம்?
நாடு ஏகப்பட்ட கடனில் மூழ்கியிருக்கிறது.. அதுவும் மாதா மாதம் கோடி கோடியாக கடனுக்காக அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மை தான். நாட்டை திவால் ஆவதிலிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அந்த திவால் நிலையிலிருந்து நாட்டை மேலே கொண்டு செல்ல நல்ல தொரு நிதி அமைச்சர் லிம் குவான் எங் கிடைத்திருக்கிறார். கடன் அடைப்பது மட்டும் அல்லாமல் புத்தாண்டில் ஏழைப்பிள்ளைகளுக்குப் பண உதவி, அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ் என்று அவரால் அறிவிக்க முடிகிறது. கடன் இருந்தாலும் தொடர்ந்து நல்ல பணிகளுக்கு அவரால் பணம் ஒதுக்க முடிகிறது. இது எப்படி முடிகிறது? நிதி அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார்! ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!
நூறு நாள் உறுதி மொழிகளில் நாடற்ற பிரஜைகளின் பிரச்சனை முதன்மையானது. இந்த முதன்மையான பிரச்சனையைத் தீர்த்து வைப்பது யாருடைய பொறுப்பு? எந்த அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார்? ஏன் அந்த அமைச்சர் செயல் பட மறுக்கிறார். இது உள்துறை அமைச்சை சார்ந்தது என்றால் ஏன் அந்த அமைச்சால் செயல் பட முடியவில்லை? செயல் பட மறுக்கும் அதிகாரிகளை ஏன் தொடர்ந்து இந்தச் தெண்டச் சோறுகளை வைத்திருக்க வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயற்கை தானே!
ஒரு நாட்டின் கோடி கணக்கான கடன்களை அடைக்க ஒரு அமைச்சரால் முடிகிறது. இருபத்து நான்கு மணி நேரத்தை அந்த அமைச்சர் செலவிடுகிறார். ஆனால் நூறு நாள்களில் முடிப்போம் என்று சொல்லப்பட்ட வாக்குறுதியை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை! நூறு நாள்கள் முடிந்துவிட்டன! இரு நூறு நாள்கள் முடிந்துவிட்டன. இன்னும் எந்த விடியலும் தெரியவில்லை! ஆக நாடற்றவர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக நினைக்கலாம்!
ஒன்று தெரிகறது. பழைய அரசாங்கப் பாதையில் புதிய அரசாங்கமும் பயணிக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது!
சந்தியாகோ நீங்கள் சொல்லுவது சரிதான்!
No comments:
Post a Comment