Wednesday 19 December 2018

ஏன் இந்த விலகல் கோரிக்கை?

பிரதமர் துறை  துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அவருடைய சேவை நமக்குத் தேவை என்பதாகத்தான் நாம் சொல்ல வேண்டி வருகிறது. அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சொல்லுகிற அளவுக்கு அப்படி ஒன்றும் தவறு செய்ததாகவும் தெரியவில்லை.

இன்னொன்றையும்  நாம் கவனிக்க வேண்டும். இந்தியர்கள் யாரும் அவர் பதவி விலக வேண்டும் என்று இதுவரை சொல்லவில்லை.   அதனை வைத்துப் பார்க்கும் போது அவரது சேவை இந்தியரிடையே திருப்தியாகவே இருப்பதாகக் கொள்ளலாம்.  அவர் வாழ்க்கை பெரும்பாலும் இந்தியரை ஒட்டியே தொடர்ந்து வந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை அவரது சேவை நிறைவாகவே இருப்பதாகக் கருதலாம்.

பதவிக்கு வந்த இந்த ஆறு,  ஏழு மாதத்தில் பெரிதாக நாம் அவரிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. அவர் இந்தியர்களை மட்டும் பிரதிநிதிக்கவில்லை.  மற்றைய சிறுபான்மையினரான பழங்குடி மக்களையும் பிரதிநிதிக்கிறார்.  இவ்ர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவே ஆறு, ஏழு மாதங்கள் பிடிக்கும். அதற்குள் இவரைப் பற்றி குறை கூறுவதும் பதவி விலக வேண்டும் என்று சொல்லுவதும் எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை.

இவர் பதவி விலக வேண்டும் என்று முதன் முதலில் சொல்ல ஆரம்பித்தவர்கள் யார்?  அம்னோ, பாஸ் கட்சியினர் தான் இதனைச் சொல்ல ஆரம்பித்தனர். காரணம் என்ன? இந்த இரு கட்சியினருக்கும் வேதமூர்த்தியைப் பிடிக்கக் காரணமில்லை.  ஹின்ரா காலத்திலிருந்தே  அவரை இவர்களுக்குப் பிடிக்காது ஒரே காரணம். கோவில்களுக்காகப் போராட்டம் நடத்தியவர் என்பதே அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது! அத்தோடு இந்தியர்களுக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர். அவர்கள்,  வேதமூர்த்தி ம.இ.கா.வினரைப் போல செயல் படுவார் என நினைத்தார்கள்.

நம்மைப் பொறுத்தவரை வேதமூர்த்தி நமக்குத் தேவை. அவர் கோவில்களுக்கு  மட்டும் அல்ல இந்திய சமுதாயத்தின் நலனில் அக்கறை உள்ளவர். பதவியில் இருக்கும் காலத்தில் அவர் தனது தாக்கத்தை விட்டுவிட்டுத் தான் போவார். அதனை நாம் நம்பலாம்.  வெறும் பதவியை அலங்கரிப்பவர் அல்லர் அவர்.

நமக்கு எத்தனை இந்திய அமைச்சர்கள் இருந்தாலும் வேதமூர்த்திக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் கட்சிகளின் சார்பில் பதவி வகிப்பவர்கள். கட்சி அவர்களைக் கட்டுப்படுத்தும்.  நியாயமே! மன்றங்கள், இயக்கங்கள், சங்கங்கள் குரல் கொடுக்காது!  காரணம் அங்குத்  தமிழர்கள் இல்லை!

நாம் தான் குரல் கொடுக்க வேண்டும். ஆம்! தமிழர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்!

No comments:

Post a Comment