செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மூலம் ஒரு செய்தி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அவர் கூறிய ஒரு கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது. இப்போது அமைச்சரவையில் இருக்கும் நமது இந்திய அமைச்சரகளிடையே ஒற்றுமில்லை என்பதை தடாலடியாகப் போட்டு உடைத்திருக்கிறார்! சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கை சரியாக இல்லை என்பது தான் அவர் சொல்ல வந்த செய்தி.
நமக்கும் இது ஆச்சரியத்தை அளிக்கத்தான் செய்கிறது. பதவி ஏற்று ஏழு மாதங்களில் இப்படி ஒரு நிலைமையா என்று நம்மை யோசிக்க வைக்கிறது! அதுவும் முக்கியமான ஒரு விவகாரத்தில் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. மிகவும் வேதனைக்குரியது. ஆலயப் பிரச்சனை என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு மனிதனின் உணவர்களைத் தூண்டுகிற பிரச்சனை.
"அசம்பாவிதம் நடந்த பிறகு துக்கம் விசாரிக்க வருகிறார்கள்" என்பதாக அவர் கூறியிருப்பது சிந்திக்க வேண்டியது மட்டும் அல்ல மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. இதைத் தான் நமது முன்னாள் ம.இ.கா. தலைவர்கள் செய்து வந்தார்கள். ஒன்றில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டார்கள்! "நாம் தலையிட வேண்டாம்! பிரச்சனையை கொஞ்சம் அப்படி இப்படி என்று இழுத்துக் கொண்டு போனால் போதும்! அப்புறம் நமது மக்கள் மறந்து விடுவார்கள்!" என்பது தான் அவர்கள் வகுத்துக் கொண்ட மிகப்பெரிய கொள்கை.
ஆனால்; பக்கத்தான் அரசாங்கத்தில் உள்ள இந்தியத் தலைவர்கள் அப்படியெல்லாம் சிந்திக்க முடியாது. அதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்போம் என்று அவர்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டாம் என்று நாம் சொல்ல வேண்டிய தருணம் இது.
ஏற்கனவே நாங்கள் ஏமாந்த சமூகம் என்று ம.இ.கா. வால் முத்திரைக் குத்தப்பட்ட சமூகம் நாம். நாம் சொல்ல வருவதெல்லாம் "செய் அல்லது செத்து மடி" என்பது தான். சும்மா குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு குளிர்ச்சியான வசனங்களை ஒப்புவிக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறத் தயராகத் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களாக இருந்தாலும் சரி வராதவர்களாக இருந்தாலும் சரி ஒன்றை நினைவுறுத்துகிறேன். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டீர்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் கடமை என்பது இந்திய மக்களைச் சார்ந்தது. அவர்களின் துன்பங்களில் உங்களின் பங்கு அளப்பரியது. துன்பங்களை நீங்கள் தான் சுமக்க வேண்டும்.. மக்களைச் சுமக்க வைக்க வேண்டாம்.
தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்றால் சமுதாயத்தை அது பாதிக்கும் என்பதை மறவாதீர்கள். மீண்டும் இந்தத் துக்கம் விசாரிக்கும் வேலை வேண்டாம்! உங்களை நாங்கள் பதவியில் வைத்திருப்பது துக்கம் விசாரிக்க அல்ல! துக்கத்தை தூக்கி எறிய!
No comments:
Post a Comment