Sunday 9 December 2018

இது தாண்டா புதிய மலேசியா...!

இப்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கலாம்!

வேறு என்ன? கடந்த சனியன்று (8-12-2018) நடைபெற்ற மிகப் பிரமாண்ட பேரணியை நடத்திய தேசிய முன்னணி - பாஸ் கட்சிகளின் மகிழ்ச்சிப் பேரணியை வாழ்த்தலாம், வணங்கலாம்! எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லை, ஆரவாரம் இல்லை!  இந்தப் பேரணியே அமைதிப் பூங்காவாக  ஆகிவிட்டது.

இரு கட்சிகளைச் சார்ந்தவர்களும் அடக்கமாக நடந்து கொண்டனர் என்பதே புதிய மலேசியா உதயமாகி விட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  தேசிய முன்னணி அரசாங்கத்தில் இப்படி நடப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதை நாம் கண்ணாரக்  கண்டிருக்கிறோம்!

பேரணியில் கலந்து கொள்ளுபவர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தினாலும் அன்றைய அரசாங்கம் குண்டர் கும்பல்களை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்! அதனால் பேரணிகள் என்றால் குழப்பம், அடிதடி,  வன்முறை, அத்து மீறல் என்று ஒவ்வொரு பேரணியிலும் பிரச்சனைகள் எழுந்தன.

ஆனால் இந்தப் பேரணியில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை! அதுவே வாழ்த்துக்குறியது! காவல்துறையும் தனது பணியைச் செம்மையாக செய்ததாக செய்திகள் கூறுகின்றன. 

ஆனால் ஒரு செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. பேரணியில் குழந்தை குட்டிகளையெல்லாம் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  குழந்தைகளைக் கூட்டி வரும்போது  விரும்பத்தகாத எதுவும் நடக்கலாம். பேரணிகளில் குழைந்தைகளுக்கு என்ன வேலை? அது பெரியவர்களோடு போகட்டும். குழைந்தைகளுக்கு எதிர்ப்புணர்வை பிஞ்சிலேயே புகட்ட  வேண்டாம்.

நமது பிரதமர் மகாதிர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த மாபெரும் பேரணியில் குப்பைக் கூளங்கள் இல்லாப்  பேரணி என்கிற பெயரும் உண்டு. அப்படி இருந்ததையும் பேரணியினர் போகும் போது சுத்தம் செய்துவிட்டு போய்விட்டனர்!

புதிய மலேசியவிற்கு இந்த பொறுப்புணர்ச்சி தான் தேவை. நாடு சுத்தமாக இருக்க வேண்டும். மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுத்தமாக இருக்க வேண்டும்! எல்லாரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். 

இது தான் புதிய மலேசியா! 

No comments:

Post a Comment