இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் இன்றைய நிலையில் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது,.
இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பது நாம் அறிந்தது தான். கொடுப்பவர்கள் அதிகரித்ததன் பலன் தான் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது! நாம் கொடுக்கவில்லை என்றால் யார் கேட்க முடியும்?
என் வாழ்நாளில் நான் யாருக்கும் இலஞ்சம் கொடுத்தது கிடையாது. நான் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்களும் கேட்கத் தயாராக இல்லை!
ஒரு முறை, தெரிந்தும். தவறான வழியில் காரைச் செலுத்தினேன். காலை வேலை தப்பித்து விடலாம் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தது போலிஸ் கார். நானும் பேசவில்லை, அவர்களும் பேசவில்லை! உடனே சம்மனைக் கொடுத்து நீதிமன்றத்தில் பணத்தைக் கட்டச் சொன்னார்கள். அடுத்த நாள் சென்று கட்டினேன்! அது தான் முதலும் கடைசியும்! நல்ல பாடம்! என் வாழ்நாளில் இதுவரை அரை காசு கூட இலஞ்சமாகக் கொடுத்ததில்லை. அது எனது கௌரவத்துக்கு குறைச்சல் என்று நான் நினப்பதுண்டு.
இலஞ்சம் வாங்கக் கூடாது என்பது சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் வீட்டில் அப்பா சரியாக இருக்க வேண்டும். குழைந்தைகளுக்கு அப்பா தான் வழிகாட்டி. அப்பா கொள்ளையடித்தால் மகன் தப்பாமல் கொள்ளை அடிப்பான்!
பள்ளியிலேயே இலஞ்சம் ஊழலைப் பற்றி பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். அதுவும் சரி தான். ஆனால் ஆசிரியர்கள் சரியாக இருக்க வேண்டும். பள்ளிச் சிற்றுண்டிகளில் இலவசம், கமிஷன் என்னும் நிலை இருந்தால் பள்ளியிலும் சரியாக வராது! ஆனால் அங்கு ஏதோ ஒரு சிலருக்காக நாம் பள்ளிகளை ஒரேடியாக புறக்கணித்து விட முடியாது! பல நல்ல ஆசிரிய பெருமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கிறார் பட்டுக் கோட்டையார். குழைந்தைப் பருவத்திலேயே திருடு என்பதென்ன, ஊழல் என்பதென்ன என்பது சொல்லிக் கொடுக்கப் பட வேண்டும்.
வருங்கால மலேசியா சிறப்பாக இருக்கும் என நம்பலாம். ஓர் ஊழற்ற சமுதாயம் ஒளிரும் என எதிர்ப்பார்க்கலாம். ஊழலால் வளர்ந்த சந்ததி வெகு விரைவில் காணாமல் போகும்!
ஊழலை ஒழிக்க முடியுமா? முடியும்! கொடுப்பவர் வாங்குபவர் இரு பாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சட்டம் தனது கடமைகளைச் சரியாக செய்தால் ஊழற்ற மலேசியா சாத்தியமே!
No comments:
Post a Comment