Thursday 13 December 2018

ஐசர்ட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகள்..!

ஐக்கிய நாடுகள் சபையின் ICERD ஒப்பந்தத்தை மலாய் அரசியல்வாதிகள், மலாய் அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் கொடுத்த எதிர்ப்பின் பேரில் நடபு அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. பின் வாங்கிவிட்டது என்று சொல்லலாம். மலாய்க்காரர்களின் எதிர்ப்பை மீற முடியாது என்பது அவர்களின் விளக்கம்.

அதன் பொருள்:  மலாய்க்கார பூமிபுத்ராக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் சமயமான இஸ்லாம் பாதுகாக்கப் பட வேண்டும். மற்றவர்களுக்குச் சமயமும் இல்லை, உரிமைகளும் இல்லை!

ஒன்றை நாம் உற்று நோக்க வேண்டும்.  இது முற்றிலுமாக பெரும்பான்மை மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் தான். சமயமும் இதில் அடங்கும்.

இது தான் சரி என்பது அவர்களின் வாதம்.  நமக்கும் இதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளில் மியான்மாரும் ஒன்று. அந்த நாடும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில்  கவனம் செலுத்திய நாடுகளில் ஒன்று. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் சமயமான பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதனால் சிறுபான்மை ரோஹிங்யா  மக்களை ஓட ஓடத் துரத்தினார்கள், சுட்டுத் தள்ளினார்கள், பெண்களை, குழைந்தைகளைப் போட்டு மிதித்தார்கள் இன்னும் பல கொடுமைகள்.

இப்படி ஒவ்வொரு நாடும் தங்கள் விருப்பத்திற்கிணங்க  சிறுபான்மையினரை நடத்தக் கூடாது என்பது தான் ஐசெர்ட் ஒப்பந்தம். ஆனாலும் தான் தோன்றித்தனமாக சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையிழுத்திட மறுக்கின்றன. 

இன்றைய நிலையில் நாமே கையிழுத்திடாத நிலைமையில் மற்ற நாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் தலையிட முடியாது, நியாயம் பேச முடியாது 

ஐசர்ட்டை எதிர்க்கலாம் ஆனால் அதன் நியாயத்தை எதிர்க்க முடியாது!

No comments:

Post a Comment