Sunday 2 December 2018

வேதா - மாஸ்லீ ...!

பிரதமர் துறை துணையமச்சர் வேதமூர்த்தி, கல்வி அமைச்சர் மஸ்லி இருவரும் சிறப்பாகவே செயலாற்றுகிறார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதற்கு முன்னர் பிரதமரின் ஊடகத் தலைவர் காதிர் ஜாசின் இந்த இருவரைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்தின.

இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்பதாக அவர் சாடியிருந்தார். ஒரு வேளை வேதமூர்த்தி இந்து கோவில்களில் தலையீடுவது பற்றி ஏதேனும் சொல்ல வரலாம். அவர் அதனைத் தெளிவாகச் சொல்லவில்லை.  அம்னோ தரப்பினர் கூட வேதமூர்த்தியைக் குறை கூறுகின்றனர். அம்னோ சொல்லுகின்ற காரணங்களையே இவரும் சொல்லலாம்! அந்தக் குறை கூறல்களை வைத்தே காதிரும் வேதாவைச் சாடியிருக்கலாம்!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். பிரதமர் சொல்ல என்ன நினைக்கிறாரோ அதனை காதிர் ஜாசின் முன்னதாகவே சொல்லி அவர்களை எச்சரிக்கிறாரோ! இருவரும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்துகிறார்களோ என்னும் ஐயமும் நமக்கு உண்டு! 

அமைச்சர்கள் என்னும் முறையில் பிரதமர் அவர்களை எச்சரிக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தனது பத்திரிக்கையாளர் மூலம் செய்திகளைச் சொல்ல வைக்கிறாரோ! இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்!

மஸ்லியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நம்மைப் பொறுத்தவரை வேதமூர்த்தியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இல்லை.  இந்தியர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைச்சர் வேதமூர்த்தி. அவரால் முடிந்த வரை சிறப்பாகவே செயல்படுகிறார். இந்தியர்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்.  ஏன்? சீபீல்டு ஆலயத் தகராற்றிலும் அவர் நன்றாகவே செயல்பட்டார்.

ஒரு வேளை தவறுகள் நேரலாம். அவர் அப்படி ஒன்றும் அனுபவப்பட்ட அமைச்சர் இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். அது அவரால் முடிந்தது தான்.

அதனால் அம்னோ தரப்பினர் சொல்லுகிறார்கள் என்பதற்காக வேதமூர்த்தியைச் சீண்டிப்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல! இந்திய சமுதாயத்திற்காக அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். அவர் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு. அது போல பிரதமரும் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்!

வேதா, இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment