Saturday 1 December 2018

நிலத்தை வாங்க முடியுமா...?

"சீபில்டு ஆலய நிலத்தை நாமே வாங்கிவிட்டால் என்ன?" என்று ஒரு எண்ணத்தை தூவி இருக்கிறார் பிரபல தொழிலதிபர் வின்சன் டான்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தில் வீற்றிருக்கும் அந்த சீபில்டு ஆலயம் இந்துக்களிடமே இருக்க வேண்டும் என்றால் அது இந்து மக்களுக்குச் சொந்தமாக வேண்டுமென்றால் அந்த நிலம் வாங்கப்பட வேண்டும் என்பது தான் அவர் சொல்லுகின்ற ஒரு தீர்வு. 

அந்த நிலம் 1.1 ஏக்கர் என்று சொல்லுப்படுகிறது. அதன் விலை  சுமார் ஒன்றரை கோடி வெள்ளி மதிப்பு பெறும். இப்போது புரிகிறதா ஏன் அந்த நிலத்தை மேம்பாட்டார்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை? 

அந்த நிலத்தை வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு நிதியைத் திரட்டியாக வேண்டும்.  அதற்கும் வழிகாட்டியிருக்கிறார் வின்சன் டான். அவரே முன்வந்து 5 இலட்சம் வெள்ளியை வழங்கி அந்நிதியைத் தொடக்கி வைத்திருக்கிறார். அத்தோடு இன்னும் இரு வர்த்தக பிரமுகர்களும் தலா 5 இலட்சம் வெள்ளி கொடுத்து அந்நிதியை 15 இலட்சமாக உயர்த்தியிருக்கின்றனர்.  இவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதொரு நல்ல ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய தொழிலதிபர்களும் நாட்டில் பல பேர் இருக்கின்றனர்.  அவர்கள் நினைத்தால் ஒரு கோடியோ, ஒன்றரை கோடியோ என்பதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்த்தக சபைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இணைந்தால் ஒரு சில நாள்களிலேயே இந்தத் தொகையை எட்டிவிடலாம். அத்தோடு பொது மக்கள். இது முடியும் என்று நாம் நம்பலாம்.

இப்போது இந்த கோவில் விஷயத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் நிச்சயம் தேவை.  இப்போதே  தலைமை பீடம் யாருக்கு என்கிற ஒரு வேகம் தெரிகிறது. இது தேவை இல்லாத ஒன்று.

இப்போது இந்த நிலப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்போம். கோவிலை வைத்துக் கொண்டு  கலவரம் பண்ணுவதெல்லாம் பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

அமைதியின் மூலம் தான்-பேச்சுவார்த்தயின் மூலம் தான்-அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்தாக வேண்டும். 

இது தொழிலதிபர் வின்சன் டான் கொடுத்த ஒரு யோசனை. வரவேற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment