பெர்சாத்துவின் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு சைட் சடிக் இலாயக்கற்றவர் என்பதைக் காட்டி விட்டார்!
சாடிக் எந்த நிலையில் பதவிக்கு வந்தார் என்பது நமக்குத் தெரியும். பல பெரிய வாய்ப்புக்களை உதறித் தள்ளிவிட்டு வந்தவர் " நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதால் இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பை மறுத்து விட்டேன்" என்று சேவக்காக வந்தவர். உள்ளூர் பட்டதாரி.
அதெல்லாம் அவரைப் பற்றியான கூடுதல் மதிப்பீடுகள். அவரின் திறன் பற்றி நமக்கு எந்த ஐயமுமில்லை. நம்புக!
ஆனால் வேலை அனுபவம் என்று வரும் போது அதில் அவர் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் இளைஞர் அணி தலைவர் மட்டும் அல்ல விளையாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஒரே குறை அவருக்கு வேலை அனுபவம் இல்லை. அரசியல் அனுபவம் இல்லை. பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பது புரியவில்லை! முதலில் மாணவர் பருவம். அப்போது எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அமைச்சர் பதவி. இது அரசியல் பதவி. எல்லா இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு போக வேண்டிய பதவி. யோசித்துப் பேச வேண்டிய பதவி. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச முடியாது.
அவரின் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தியைப் பற்றியான கணிப்பு மிகவும் தவறானது. "அவர் ஓர் இந்தியர். நானோ பூமிபுத்ரா. நான் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும். அவரைப் பற்றி பேசினால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப் போவதில்லை!" என்று அவர் நினைத்தால் - நினைத்தால் கூட - தவறு தான்.
சாடிக் ஒன்றை மறந்து விட்டார். வேதா தீடிரென பொது வாழ்க்கைக்கு வந்தவர் அல்லர். பொது வாழ்க்கை என்பதில் அவரின் இரத்தத்தில் ஊறியது. அதுவும் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து போராடியவர். அவர் கோவில் போராட்டங்களில் அதிக ஈடுபாடு காட்டினாலும் அதுவும் அவருடைய போராட்டங்களில் ஒன்று தான்.
சாடிக் பிரதமரிடம் மனு கொடுக்கும் முன்னர் அவரே நேரடியாக வேதாவிடம் பேசி இருக்கலாம். அவருடைய கருத்தைக் கேட்டிருக்கலாம். அல்லது உண்மை நிலவரம் என்ன என்பதை கேட்டு அறிந்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் பிரதமரிடம் மனு கொடுப்பது அவருடைய முதிர்ச்சியைக் காட்டவில்லை. அம்னோ, பாஸ் இரு கட்சிகளும் அரசாங்கத்தை எப்படி - எப்போது குறை கூறலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பேசுவதெல்லாம் அரசியல் இலாபத்திற்காக! சாடிக்கும் வேதாவும் ஒரே அரசாங்கத்தை பிரதிநிதிப்பவர்கள் என்னும் போது சாடிக் தனது முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும்.
சாடிக் இன்னும் இளைஞராகத் தான் இருக்கிறார். பதவிக்கு ஏற்ப முதிர்ச்சி இல்லை! கூடி வேலை செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆலோசனை!
No comments:
Post a Comment