அன்வார் இப்ராகிம் மகள் நூருல் இசாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்களுக்கு நமது வாழ்த்துகள்! காரணம் அவருக்கு அந்த தகுதி உண்டு என்பதில் எந்த சந்தேமும் இல்லை.
ஆனால் பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியைக் காலி செய்து விட்டு நூருலுக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்படி ஒரு கோரிக்கையை திரங்கானு மாநில அமானா இளைஞர் பிரிவு பிரதமரிடம் முன் வைத்திருக்கிறது. திரங்கானு என்றால் நமக்குப் புரிகிறது. அவர்களுக்கு இந்தியர்களின் பிரச்சனை புரியாது. அவர்கள் எல்லாக் காலங்களிலும் மலாய்க்காரர்களுடன் வாழ்பவர்கள். நல்ல காலம் அவர்கள் மாநிலத்திலிருந்து ஒருவரை நியமிக்கச் சொல்லி எந்த முன் மொழிதலும் இல்லை. அது வரை அவர்களைப் பாரட்டலாம்!
இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒன்று தான். வேதமூர்த்தி ஏன் பதவி விலக வேண்டும் என்பது பற்றி இவர்களால் சரியான காரணங்களைச் சொல்ல முடியவில்லை! ஏன், ஏன் என்று தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். அவர் பதவி விலகுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பதவி விலகுகின்ற அளவுக்கு அவர் எந்தச் செயலையும் செய்யவில்லை.
பாஸ் கட்சிக்காரன் சொன்னான், அம்னோகாரன் சொன்னான் என்கிற ரீதியில் தான் மற்றவர்களும் அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் சொன்னார்கள் என்றால் அது சரியா என்று ஆராய்ந்து பார்க்கின்ற அளவுக்குக் கூட அவர்கள் மன வளர்ச்சி பெற்றவர்களாக இல்லை!
இந்த விலகல் குறித்து அதிகமாக மலாய்க்கார அரசியல்வாதிகளின் பக்கம் இருந்து தான் கேட்கிறது. சீனர்களோ, இந்தியர்களோ அல்ல. நம்மைப் பொறுத்தவரை இது மலாய்க்கார அரசியல்வதிகளின் பொறாமையைத் தான் காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை! ஆமாம்! எல்லாக் காலங்களிலும் ஒரே ஒரு அமைச்சரை வைத்துக் கொண்டிருந்த சமூகம் இப்போது நாலு அமைச்சர்கள் என்னும் போது அது பல மலாய் அரசியல்வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை! அதைக் குறி வைத்தே மலாய் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்!
ஏன் திரங்கானு அமானா கூட வேதமூர்த்தியை விலக்கி விட்டு இன்னொரு இந்தியரைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லவில்லை. அது ஒன்றே போதும் அவர்கள் இன வெறியர்கள் என்பதற்கு! இந்தியர் வேண்டாம் என்றால் இன்னொரு இந்தியரைப் போடுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் அவர்கள் நியாயமானவர்கள். ஆனால் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இன ரீதியில் சிந்திக்கிறார்கள்! அப்படி என்றால் நாமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும்!
யாருக்கும் எந்தப் பதவியாவது கொடுக்கட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்பது கண்டனத்திற்குரியது.
வேதா, தனது பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நமது பிரதமர் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! அதே போல நமது இயக்கங்களும் அவருக்காகக் குரல் கொடுக்க வேண்டும்!
No comments:
Post a Comment