Friday 28 December 2018

முதலாளிகளுக்கு பிரம்படி...!

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்குப் பிரம்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் முஸ்தபா கூறியிருப்பதாக ஒரு செய்தி.

இப்படி சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க சட்டத்தில் இடமுண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்! இது ஆச்சரியம்!  கடந்த இரண்டு ஆண்டுகளில் 1400 க்கும் மேற்பட்ட முதலாளிகள் சட்டத்தை மீறியிருக்கின்றனர். ஆனால் அவர்களில் மூவருக்கு மட்டுமே பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்! இது ஆச்சரியம்!

இப்போது நமக்குப் புரிந்திருக்கும். நாட்டில் ஏன் அதிகமான சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் யார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்பது! முதலாளிகளுக்கு உள்ள தண்டனையை நிறைவேற்றத் தவறினால் அவர்கள் சட்டத்தை மீறுவதை யாராலும் தடுக்க முடியாது! அதனால் தான் இன்று நாட்டில் இலட்சக் கணக்கில் அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை!

முதலாளிகளுக்குப் பிரம்படி என்பது கூட  பொது மக்களுக்குத் தெரியவில்லை! அந்த அளவுக்கு அந்தச் சட்டம் பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது!  அமலில் இருக்கும் அந்தச் சட்டம் ஏன் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை என்று ஒரு முட்டாள் தனமான கேள்வியை நாம் கேட்கலாம்!  அதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறது!

நமது அண்டை நாடான சிங்கப்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்,  இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அங்குள்ள முதலாளிகள் சட்டத்தை மீறவில்லை. அது எப்படி? சட்டத்தை மீறினால் பிரம்படி என்பது அங்கும் உண்டு. அது போதும். பிரம்படி வாங்க எந்த முதலாளியும் தயாராக இல்லை!   மலேசியாவிலும் பிரம்படி வாங்க முதலாளிகள் தயாராக இல்லை!  ஆனால் அவர்களுக்கு சட்டம் பாதுகாப்புக் கொடுக்கிறது! பணம் பாதுகாப்புக் கொடுக்கிறது. இனம் பாதுகாப்புக் கொடுக்கிறது!  இப்படி எத்தனையோ பாதுகாப்புக்கள் மலேசிய முதலாளிகளுக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூரில் எந்த பாதுகாப்பும் இல்லை! 

நமது நாட்டில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் கணக்கு வழக்கின்றி வேலை செய்வதற்குக் காரணமானவர்கள் குடிநுழைவுத்துறையினரே! இந்தச் சட்டத்தை அமல்படுத்த தவறியதால் இன்று சட்டவிரோதிகள் நாட்டில் ஏராளம்! ஏராளம்!

இத்தனை ஆண்டுகள் பேசா மடந்தையாக இருந்த குடிநுழுவுத்துறையின் தலைவர் இப்போது தமது திருவாயைத் திறந்திருக்கிறார்!

இப்போது பிரம்படி யாருக்குக் கொடுக்கலாம்?

No comments:

Post a Comment