Tuesday 18 December 2018

என்ன நடந்தது...?

அன்வார் இப்ராகிமின் புதல்வி நூருல் இசா அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்! அவசர முடிவாகவும் இருக்கலாம்! அத்தியாவசியமான முடிவாகவும் இருக்கலாம்!

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்  தொடர்வார். மற்றபடி அனைத்து அரசாங்க பதவிகளிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.

அவருடைய செயல் பார்ப்பதற்கு சிறுபிள்ளைத் தனமானது என நமக்குத் தோன்றும். உண்மை நிலவரம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. குடும்ப நிலவரமா என்பதும் புரியவில்லை. அன்வார் சிறையிலிருந்த போது குடும்பத்தினரிடையே கட்டுப்பாடு இருந்தது. ஒரு சில விஷயங்களில் அன்வார் பொறுமை காக்கிறார்;காக்கத்தான் வேண்டும்.   சகித்துக் கொண்டு தான் வாழ வேண்டும். அவர் பிரதமர் அல்லவே! இதுவே குடும்பத்தின் உட்பூசலாகக் கூட இருக்கலாம். எல்லாம் யூகம் தான்!

அதுவும் இல்லை என்றால் ரபிசி ரம்லி, அஸ்மின் அலி போன்றவர்களின் திருவிளையாடலாகக் கூட இருக்கலாம்! ஒரு பக்கம் அன்வாரை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் காட்டுகின்றனர்! கட்சியில் ஒற்றுமை இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! 

ஆக, ஏதோ ஒன்று னூருல் இசா மனதைப் புண்படுத்திக் கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. 

நூருல் இசா நல்ல மனம் படைத்த ஒரு பெண். நல்ல அரசியல்வாதி. ஊழலை வெறுப்பவர். இந்தியர்களின் மேலும் பாசம் உள்ளவர். வருங்காலத்தில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பிரதமராக வர அத்தனை தகுதிகளும் கொண்டவர்.

பார்ப்பதற்கு அவர் செயல் நமக்குத் தொட்டாசினுங்கியை நினைவுபடுத்துகிறது! எடுத்தோம் கவிழ்த்தோம் என்னும் ரீதியில் செயல்படுகிறார்! 

அன்வாரின் மகள் இவர். அன்வார் எந்த அளவுக்குப் பொறுமையாக இருக்கிறார் என்பதை அறிந்தவர்.  பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பது அனுபவ மொழி.

நூருல் மீண்டும் தனது பணிகளைச் செய்ய வேண்டும். தனது பதவிகளை ஏற்க வேண்டும். சிறுபிள்ளைத் தனமாக செயல்படுவதை தவிர்க்கவேண்டும். நல்லதொரு அரசியல்வாதியை இழக்க நாங்கள் தயராக இல்லை.

நடந்தது நன்மைக்கே! நடப்பதும் நன்மைக்கே!  நடக்கப் போவதும் நன்மைக்கே!

No comments:

Post a Comment