Tuesday 11 December 2018

ஆண்டவனே! உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்..!


சில பழைய திரைப்படங்களில் இப்படி சில காட்சிகளைப் பார்த்திருக்கலாம்: திருடன் திருடப் போகும் முன் சாமி முன்னால் நின்று கொண்டு "இன்று நான் போகும் காரியம் ஜெயமானால் உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்!"  என்று சொல்லிக் கொண்டே ஒரு தேங்காயை உடைப்பான்!  அந்தக் காட்சியில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் தான் நடிப்பர்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதனை நினவுக்குக் கொண்டு வந்தது! சனிக்கிழமை நடந்து முடிந்த பேரணியில் போகும் போது ஒரு காரியம் செய்துவிட்டுப் போனார்கள்.

"சாமி! புதிய அரசாங்கம் அமைத்து எட்டு மாதம் தான்! ஆனால் அவர்கள் செய்கின்ற துரோகங்கள், அநியாயங்கள் கணக்கிலடங்கா! இன்னும் எண்பது வருஷத்திற்கு நாங்கள் தலை தூக்க முடியாது! எங்கள் அரசாங்கத்தில் தேனும் பாலும் கோடியில் ஓடியது!  இப்போது நாங்கள் கொடி தான் பிடிக்க முடிகிறது!  எங்களுக்குக் கோடிகள் தான் வேண்டும்! கொடி பிடிக்க வெட்கமாக இருக்கு! அதனால் சாமி! இந்த அரசாங்கம் எந்த நல்ல காரியங்களையும் செய்யக் கூடாது! சீக்கிரம் அவர்களின் ஆயுளைக் குறைக்க வேண்டும்! உனக்கு ஆயிரம் தேங்கா வேண்டுமானாலும் உடைக்கிறேன்!" 

இப்படித் தான் அமைந்தது அவர்களின் சாமி பக்தி! 

இதில் என்ன வேடிக்கை தெரியுமா?  ஆட்சியில் இருந்த போது எந்த ஒரு நல்ல காரியத்தையும் இவர்கள் செய்யவில்லை.  செய்ய வேண்டும் என்கிற எண்ணமே எழவில்லை!  அவர்களை அசைக்க முடியாதாம்!  மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டார்கள்! மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தார்கள்! வெள்ளைக்காரன் தேசத்தில் "ஷோப்பிங்" செய்தார்கள்! அவர்களின் தகுதிக்கு இங்கு "ஷோப்பிங்" செய்வது இழிவாம்! காரணம் இந்த நாடு இன்னும் இருளில் இருக்கிறதாம்!  மக்கள் படு முட்டாள்களாக இருக்கிறார்களாம்! படிக்காத கூட்டம். பாமர மக்கள் வாழும் நாட்டில் என்ன கிடைக்கும்? மரவெள்ளி தானே கிடைக்கும்!

எது எப்படி இருப்பினும் அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டுப் போனார்கள். அத்தோடு  நேர்ந்து விட்டுப் போயிருக்கிறார்கள்! நூறு தேங்காய் என்ன ஆயிரம் தேங்காய் கூட உடைக்கத் தயாராய் இருக்கிறார்கள்! சாமி கண் திறக்குமா பார்ப்போம். ஆனால் சாமி நல்லதற்குத் தானே கண் திறக்கும். கயமைத் தனத்திற்கெல்லாம் கண் திறக்குமா?

அப்பனே! ஆண்டவா! நானும் நூறு தேங்காய் உடைக்கிறேன்! என் பக்கமும் உமது கடைக்கண் பார்வையைத் திருப்பும்!

No comments:

Post a Comment