Sunday 23 June 2019

பசிக் கொடுமையால் ஏற்பட்ட இறப்பா?

கடந்த சில நாள்களாக கிளந்தான் மாநிலத்தில் பாத்தெக் பூர்வீகக் குடியினரைப் பற்றியான செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

நல்ல செய்திகளாக இருந்தால்  வர  வேற்கலாம்.  கெட்ட செய்திகளாக அதுவும் சாவு செய்திகளாகவே  வந்தால் வர வேற்கவா  முடியும். என்ன செய்வது?  அப்படித்தான்  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இறந்ததற்கான காரணங்கள் பலவாறு சொல்லப்படுகின்றன.  தடுப்பூசி போடுவதில்லை  போன்ற வகையறாக்கள் ஒரு பக்கம்.  அசுத்தம்,  அசிங்கம. சூழல் இப்படி ஒரு பக்கம். இன்னும் பல.

ஆனாலும் பூர்வீகக் குடியினரைச் சார்ந்த அமைப்பு ஒன்று சரியான  காரணங்களைக்  கூறியிருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது. ஆமாம். பசிக் கொடுமையால் அவர்கள் இறக்கிறார்கள் என்பது  தான் அந்த அமைப்பின் குற்றச்சாட்டு. 

அவர்களின் வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன.  மிகத் தலையாயது அவர்களின் நிலங்கள்.  காலங்காலமாக அவர்கள் பயன் படுத்திய நிலங்கள்  அனைத்தும்  நவீன கால அரசியல் அசுரர்களால் பறி போயின.  இந்தப் பூர்விகக் குடியினர் வாழ்வதே அவர்களின் நிலங்களை நம்பித்தான்.  அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் சந்தோஷம் அனைத்தும் இந்த நிலங்களைச் சுற்றித் தான்.  

மேம்பாட்டுத் திட்டங்கள்  என்கிற பெயரில்  அவைகளை அழித்து விட்டு மறு குடியேற்றம் செயவதும்  அவர்கள் விரும்பாத  காரியங்கள் அனைத்தும் செய்வதும் பின்னர் அவர்களைப்  புறக்கணிப்பதும்  ஏதோ அவர்களை வேண்டாத விருந்தாளியாக நடத்துவதும் தான்  இது  நாள் வரை நடந்து வந்திருக்கிறது. இவர்களின் பெயரைச் சொல்லி பலர், குறிப்பாக அரசாங்க ஊழியர்கள்,  பிழைப்பு நடத்தி வருவது என்பதெல்லாம் புதிய செய்தி அல்ல. நமக்கும் தெரிந்த செய்திகள் தான்.

அவர்கள் காடுகளில் இருக்கலாம். அது தவறல்ல.  அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்  என்று  அவர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட  அவர்கள்  மகிழ்ச்சியாக  இருப்பார்கள். பசியால் இறக்க மாட்டார்கள். 

இப்போது அவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தான் அரசாங்கம் அவர்களை வைத்திருக்கிறது. எந்த வித மேம்பாட்டுத் திட்டமும் அவர்களுக்கு எந்த வித மேம்பாட்டையும் கொண்டு வரவில்லை.  கல்வியும் அவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை. அவர்கள் கல்வி கற்றவர்களாகவும் இல்லை. எல்லாமே அரைகுறை என்கிற நிலை தான்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது உணவு தான். வயிறு நிறையாமல் எதுவும் அசையாது. முதலில் அதனைக் கொடுத்தால் தான்  அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியும். நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

பசிக் கொடுமையிலிருந்து அவர்கள் காப்பாற்றப் பட வேண்டும்!

No comments:

Post a Comment