Thursday 27 June 2019

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணிக்கிறதா?

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணிக்கிறதா என்று மீண்டும் பேச்சு எழுந்துள்ளது!

அதற்குக் காரணமாக உள்ளவர்கள் பாஸ் கட்சியினர்.  பாஸ் கட்சி  தனது சமீபத்திய மாநாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் முடக்கப்பட வேண்டும் என்பதாகத்  தான் தோன்றித்தனமாக பேசியுள்ளனர்.

ம.இ.கா. இப்போது பாஸ் கட்சியுடன் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து உள்ளது. இந்த நிலையில் பாஸ் ஆடுகின்ற ஆட்டத்துக்கு இவர்களும் சேர்ந்து தாளம் போட வேண்டும்! இப்போதைக்கு  ம.இ.கா. வை விட பாஸ் பலம் வாய்ந்த கட்சி என்பது உண்மை.  ம.இ.கா. இனி தலை எடுக்குமா என்பது அவர்களுக்கே தெரியாது!  இந்தியர்களைப் பொறுத்தவரை ம.இ.கா. என்பதே கறை பட்ட ஒரு வரலாறு! அது போதும்!

பாஸ் கட்சியை விட்டுத் தள்ளுங்கள். கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கின்ற போது ம.இ.கா. எந்த அளவுக்குத் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவியாக இருந்திருக்கிறது? அது ஒரு கேள்விக்குறி!

தமிழ்ப்பள்ளிகளைப் பயன்படுத்தி பணத்தைச் சேர்த்தவர்கள் ம.இ.கா.வினர்!  இது ஒன்றும் ரகசியம் அல்ல.  அவர்கள் மட்டும் தமிழ்ப் பள்ளிகளோடு ஒத்துழைத்திருந்தால் எத்தனையோ பள்ளிகள் நல்ல முறையில் சீரமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை! 

இப்போது நமது கண்களுக்குப் "பளிச்" என்று தெரிவது  அவர்கள் நடத்திய ஒரு சில ஊழல்கள்:  ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் மூன்று ஏக்கர் நிலத்தை அவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்!  எத்தனையோ முறையீடுகள். ஆனால் அவர்கள் அதனைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை! அதே போல பேரா மாநில அரசாங்கம் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகக் கொடுத்தார்கள். அதனை அப்படியே ம.இ.கா. வினர் கபளீகரம் செய்து விட்டார்கள்!  இது ஒரு பெரிய அதிர்ச்சி தான்! நமக்குத் தான் அதிர்ச்சி! அவர்களுக்கு இல்லை!

காலங்காலமாக  கொள்ளையடிப்பதையே அரசியலாகக் கொண்டவர்களுக்கு எதுவும் உறைக்காது! இனம், மொழி என்பது பற்றியெல்லாம் அவர்களிடம் பேச முடியாது! அவர்களைப் பொறுத்தவரை பணம் மட்டும் தான் இனம், மொழி!  அது தான் ம.இ.கா.!

தமிழ்ப்பள்ளிகளை ம.இ.கா. புறக்கணித்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன! புதிதாக ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment