கேள்வி
தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு சரியா?
பதில்
இந்தப் பிரச்சனையில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு. காரணம் இதில் எனக்குத் தெளிவுகள் இல்லை.
ஒரு காலக் கட்டத்தில் இந்தியை எதிர்த்தார்கள். அந்தக் காலக் கட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இப்போதும் இந்தியை எதிர்க்கிறார்கள். சரியான காரணங்கள் தெரியவில்லை.
இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடுமா என்பது புரியாத புதிர். தென் மாநிலங்களில் - கர்னாடகா, ஆந்திரா, கேரளா - இந்த மாநிலங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. அந்த மாநிலங்களில் கன்னடமோ, தெலுங்கோ, மலையாளமோ அழிந்து போனதாக ஒன்றும் தெரியவில்லை. தமிழ் நாட்டில் இந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும் என்பது என்ன கணக்கு என்பதும் புரியவில்லை.
இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியா. அதிகாரத்துவ மொழியா என்பதும் தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் ஏன் மற்ற மாநிலங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமால் இந்தியைப் படிக்கின்றனர்? அப்படி என்றால் இந்தி படிப்பதன் மூலம் அந்த மாநிலத்தவர்களுக்கு ஏதோ இலாபம் இருப்பதாகத்தானே பொருள்! இல்லாவிட்டால் அவர்கள் ஏன் படிக்க வேண்டும்? அல்லது அவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பதன் மூலம் அவர்கள் அறிவாளிகள் என்று தானே நாம் நினக்க வேண்டியுள்ளது! இல்லாவிட்டால் தமிழ் நாட்டிலும் வேறு ஒரு மொழியைப் படிப்பதன் மூலம் மூன்று மொழிகளைப் படிக்க எங்களாலும் முடியும் என்று நாமும் காட்டலாமே!
ஒன்று நமக்குப் புரியவில்லை. கன்னடர்கள் இந்தியைப் படிக்கிறார்கள். மலையாளிகள் இந்தியைப் படிக்கிறார்கள். தெலுங்கு மக்கள் இந்தியைப் படிக்கிறார்கள். தமிழ் நாட்டில் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தியைப் படிக்கிறார்கள். மத்தியில் முக்கிய அரசாங்கப் பதவிகளில் மலையாளிகள் இருக்கிறார்கள், தெலுங்கர்கள் இருக்கிறார்கள், கன்னடர்கள் இருக்கிறார்கள். அத்தோடு தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இருக்கிறார்கள். மற்ற தமிழர்கள் யாரும் பெரிய பதவிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள் மத்திய பதவிகளில் இல்லாமல் ஒருப்பது இந்தியும் ஒரு காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!
தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆரம்பக் காலந் தொட்டே அவர்களின் செயல்பாடுகள் தமிழர்களுக்கு எதிராகவே இருந்திருக்கின்றன. திராவிடக் கட்சிகள் இந்தி எதிர்ப்பை கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்னாடக்த்திலோ காட்டவில்லை, தமிழ் நாட்டில் மட்டும் காட்டியிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? தமிழன் மட்டும் இளிச்சவாயன் என்று தானே அர்த்தம்!
ஒரு வீம்புக்காக இந்தியை எதிர்ப்பது சரியானது அல்ல. ஒரு வீம்புக்காக இந்தியை வற்புறுத்தி, திணித்து படிக்க வைப்பதும் சரியானதல்ல!
இந்திய அளவில் அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாநிலங்களும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இதில் தாழ்ந்தோர் உயர்ந்தோர் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று மொழிக் கொள்கை அவசியம். அதனை நான் ஆதரிக்கிறேன்.
எந்த மொழித் திணிப்பையும் நான் ஆதரிக்கவில்லை! அது தேவையும் இல்லை. ஆனால் மூன்று மொழிகள் தேவை.
No comments:
Post a Comment