Friday 7 June 2019

இந்திய வியாபாரிகள் வஞ்சிக்கப்படுகின்றனரா!

இந்திய  வியாபாரிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்  என்பதாக இந்தியர் வர்த்தக சங்கம்  அரசாங்கத்தை கடுமையாக சாடியிருக்கிறது.

இந்த வஞ்சிக்கப்படுதல் என்பது இன்று நேற்று அல்ல பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.  முந்தைய அரசாங்கத்திலும் சரி இன்றைய அரசாங்கத்திலும் சரி அதற்கான ஓரு சரியான தீர்வு ஏற்படும் என்னும் நம்பிக்கையும் இல்லை. முந்தைய அரசாங்கம் எதனையும் கண்டு கொள்ளவில்லை.  இன்றைய  அரசாங்கம்  கண்டு கொள்ளும் என்பதால் காதில் போட்டு வைக்கிறார்கள்!

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் அவர்கள் குற்றம் சாட்டும் "வர்த்தகச் சந்தை"  என்னும் பெயரில் வெளி நாடுகளிலிருந்து குறிப்பாக பாக்கிஸ்தானியர், வங்காள தேசிகள், வட இந்தியர்கள் போன்றவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதா  அல்லது அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்களா என்று பார்த்தால்  அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!  காரணம் உள் நாட்டு நிலைமை அவர்களுக்குச்  சாதகமாக இருந்தது என்று சொல்லலாம். இலஞ்சத்தைக் கொடுத்து இந்நாட்டில்  எதனையும் சாதிக்கலாம் என்னும் உண்மயை அவர்கள் புரிந்து கொண்டார்கள்!

பயந்து பயந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தகச் சந்தை  இப்போது அவர்களுக்கு நமது வர்த்தகர்கள் பயப்படும்படியான ஒரு சூழலை  ஏற்படுத்திவிட்டது! அரசாங்கத்தால்  இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. ஒரு இடத்தில் தடை செய்தால் இன்னொரு இடத்திற்கு அவர்கள் மாறி விடுகிறார்கள்!  கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளை அவர்கள்  கற்று வைத்திருக்கிறார்கள்! 

இந்த வெளி நாட்டு வியாபாரிகளுக்கு எல்லாமே சாதகமாக அமைந்து விட்டன!  எந்த விதி முறைகளையும் அவர்கள் பின் பற்றுவதில்லை!  எந்த வரியும் கட்ட வேண்டிய அவசியமில்லை! ஏதோ இலஞ்சமாக ஒரு சில நோட்டுகளைக் கொடுத்து விட்டு தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்!

இப்படி ஒரு சூழல் எந்த நாட்டிலாவது இருக்குமா, சொல்லுங்கள். அது தான் மலேசியா! வெளி நாட்டு வியாபாரிகளுக்கு இது ஒரு சொர்க்க பூமி!  பெரும்பாலான நாடுகளில் வெளி நாட்டவர் உள்ளூரில் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை!  ஆனால் நாம் அனுமதிக்கிறோம். காரணம் நமக்கு இலஞ்சம் தான் முக்கியம். உள்ளூர் வியாபாரிகளைப் பற்றி கவலை இல்லை.  உள்ளூர் வியாபாரிகள் யார்?  சீனரோ, மலாய்க்காரரோ அல்ல. இந்தியர்கள் தானே!  அது பரவாயில்லை! இந்தியரகளை யார் வியாபாரம் செய்ய சொன்னது?

இது தான் நமது அதிகாரிகளின் மன நிலை. இந்த மன நிலை இருக்கும் வரை நாம் பாதிக்கப்படத்தான் செய்வோம்.   

ஊத வேண்டிய இடத்தில் ஊதியாகிவிட்டது! செவிடர்கள் காதுகள் திறக்கப்படும் என நம்புவோம்!

 

No comments:

Post a Comment