Saturday 29 June 2019

ம.இ.கா.வை நம்பலாமா...?

ம.இ.கா.வை நம்புவது என்பதெல்லாம் சாதாரண விஷயமா?

இது வரை ம.இ.கா.வினரை நம்பலாம் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!  எந்தத் தடயமும் கிடைக்கவில்லை!

ஆகக் கடைசியாக படித்த செய்தி நல்ல செய்தியாக இருந்தாலும் திருப்திகரமான செய்தியாக இல்லை.  ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்  ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.  இவர்களை எப்படி நம்புவது என்று தான் சொல்ல வருகிறேன்.  இவர்கள் வதந்திகளைப் பரப்புபவர்கள்.  இவர்கள் சொல்லுவதையெல்லாம் நம்பித்தான் இந்த சமுதாயத்திற்கு இன்று இந்த நிலை!  ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதாஅல்லது ம.இ.கா. வில் உள்ள ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதா என்று நாம் ஐயப்படுவதில்  எந்தத் தவறுமில்லை.  அந்த அளவுக்குத்  தான் அவர்கள் மீது நமக்கு மரியாதை!

ஒரு செய்தி நம்மைக் கவருகிறது!  நடந்து முடிந்த எம்ஐடி கூட்டத்தில்  வடிவேலு, வீரசிங்கம், கோ.ராஜு, ராகவன் போன்றோர் தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது. ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனின் அணியினரின் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்றவர்களில் எம்.சரவணன், டி.மாரிமுத்து, எல்.கிருஷ்ணன், டி.மோகன், டி.சிவராஜா, அசோஜன், எஸ்.கே.தேவமணி, பி.கமலநாதன்,  உஷா நந்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் சாமிவேலு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது முன்னாள்  எம்.ஐ.டி.யின் நிர்வாகத்திற்கும் இப்போது  தலைமை ஏற்றிருக்கும் நிர்வாகத்திற்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்?  யாராவது ஒருவர் ...ஒரே ஒருவர் ... இவர் யோக்கியமானவர் என்று நம்மால் சொல்ல முடியுமா! அதே குட்டைகள்! அதே மட்டைகள்!  இவர்களைப் பார்க்கும் போது ஏதோ கடத்தல் கும்பல் என்கிற எண்ணம் தான் நமக்குத் தோன்றுகிறதே தவிர அப்படி ஒன்றும் சமுதாயத்தைக் காக்க வந்தவர்கள் போல் தோன்றவில்லை! 

இல்லை! நான் நம்பவில்லை! ஏதோ அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  அது ம.இ.கா. வின் சொத்தாக மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. அது இன்னும் குறிப்பிட்ட ஒரு சிலரின் சொத்தாகத்தான் இருக்கும். அதற்குத் தானே துன் சாமிவேலு தேவைப்படுகிறார்!

இப்போது ம.இ.கா.வின் சொத்துக்கள் அனைத்தும் மக்களின் சொத்துக்கள் அல்ல. தனிமனிதர்களின் சொத்துக்கள்! அவ்வளவு தான்!
 

No comments:

Post a Comment