பேரா மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற பேரா மாநில பேராளர் மாநாட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு கருத்தைச் சொன்னார்.
அதனைச் சொல்லுவதற்கு அவர் தகுதியானவர் மட்டும் அல்ல அந்தக் கருத்தைச் சொன்ன இடமும் தகுதியான இடம் தான்!
ம.இ.கா என்னும் ஆலமரம் ஒரு சில முறை கேட்டால் பட்டுப்போய் துவண்டு விட்டது என்று கூறியிருப்பது அவர் அதனை முழுமையாக அறிந்திருக்கிறார் என்ப்து நமக்கும் புரிகிறது.
ஒரு சில என்பதில் நாம் கருத்து வேறு பட்டாலும் ஒரு சிலர் செய்த முறை கேட்டால் ஆலமரம் அடியோடு சாய்க்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை! நிச்சயமாக நமக்கு அதில் வருத்தம் தான். காரணம் நாமும் அந்த மாபெரும் ஆலமரத்தில் ஒரு இலையாகவாவது இருந்திருக்கிறோம். அதனால் நமக்கும் வருத்தம் ஏற்படுவது இயற்கை தான்.
இந்த ஆலமரம் துளிர்க்க வழியில்லையா? வழி இல்லை என்று சொல்ல முடியாது. முடியும். அது இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் பிடிக்கும். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
ஆனால் முதலில் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற ம.இ.கா. முயல வேண்டும். எந்த வகையில் அவர்கள் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்? இப்போது இந்தியர்களின் அலை பக்கத்தான் பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது. பக்கத்தான் அரசாங்கம் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியும் என்றால் அந்த அலை தொடர்ந்து பக்கத்தான் பக்கம் தான் வீசிக் கொண்டிருக்கும்!
இந்தியர்கள் ம.இ.கா. மீது கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க வேண்டுமென்றால் ஒரு சில காரியங்களையாவது அவர்கள் செய்யத் தான் வேண்டும். இந்தியர்கள் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டது மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனையில் தான். இன்னும் பல நில விவகாரகங்கள், பள்ளிக்கூட நிலங்கள் என்பதெல்லாம் ஒரு தொடர்கதை!
அதை விட, சமீபத்திய காலத்தில் நடந்த, டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காலத்தில் நடந்த, எந்த மண்ணில் இருந்து இப்போது குரல் கொடுத்தாரோ அந்த பேரா மண்ணில் 2000 ஏக்கர் நிலத்தை ம.இ.காவின்ர் கபளீகரம் செய்தார்களே அது என்ன மறக்கக் கூடிய விஷயமா? அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்த நிலம். அப்படி பார்த்தால் ம.இ.கா. வினர் இருந்தால் தமிழ்ப்பள்ளிகளையே அழித்து விடுவார்களே என்னும் எண்ணம் இயற்கையாகவே வந்துவிட்டுப் போகுமே!
ம.இ.கா. மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்று நினைப்பது ம.இ.கா. தலைவர் என்கிற முறையில் அவருக்கு அது சரி தான். ஆனால் ம.இ.கா. வினர் திருடர்கள் என்னும் எண்ணத்தை முதலில் இந்தியர்களின் மனதிலிருந்து அழிக்க வேண்டும். அதற்கு அவர்கள் நிறைய உழைக்க வேண்டும். எந்த விதத்திலும் அவர்கள் துவண்டு விடக் கூடாது!
ம.இ.கா. மீண்டும் தலையெடுக்க வாழ்த்துகள்!
No comments:
Post a Comment