நாடு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப் பிதுங்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் இன்னொரு திசையில் பணம் எப்படியெல்லாம் பாழடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் நாடு கள்ளக் குடியேறிகளின் உணவுக்காக 35 இலட்சம் வெள்ளி செலவு செய்வதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கூறியிருக்கிறார்.
இது தேவையற்ற செலவு என்று நாம் சொல்ல வரவில்லை. கள்ளக் குடியேறிகள் என்று சொன்னாலும் அவர்கள் மனிதர்கள். நமக்கும் மனிதாபிமானம் உண்டு. கள்ளக் குடியேறிகள் என்பதற்காக அவர்களைப் பட்டினிப் போட்டு விட முடியாது.
இங்கு தலைமை இயக்குனர் கூறியிருப்பது உணவுக்கான செலவுகள் மட்டுமே. அத்தோடு அது முடிந்து விடுவதில்லை. இன்னும் நிர்வாகச் செலவுகள் என்று பலவுண்டு. அங்குள்ள உண்மை நிலவரம் நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகத் தான் ந்மக்குத் தெரியும்.
ஆனால் இங்குள்ள நமது கேள்விகள் எல்லாம் இதனை எப்படி தவிர்ப்பது என்பது தான். கள்ளக் குடியேறிகள் என்று சொல்லுகிறோமே அவர்கள் எப்படி கள்ளத்தனமாக குடியேறினார்கள். நாட்டுக்குள் எப்படி அவர்கள் கள்ளத்தனமாக வர முடிந்தது. இதற்குப் பொறுப்பானவர்கள் யார்?
குற்றச்சாட்டு என்று போனால் அது குடிநுழைவுத் துறையைத் தான் சுட்டிக் காட்ட வேண்டி வரும். அவர்கள் தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மற்ற நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்கள் தான் நம் நாட்டிலும் இருக்க வேண்டும். எந்த நாட்டிலும் ஏற்றுக் கொள்ளாத சட்டத்திட்டங்கள் இங்கு இருப்பதாகச் சொல்ல முடியாது. எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சட்டத்திட்டங்கள் தான்.
அப்படியிருக்க நம் நாட்டில் மட்டும் கள்ளக் குடியேறிகளின் நடமாட்டம் எப்படி அதிகமாயிற்று? மலேசியா எப்படி கள்ளக் குடியேறிகளின் சொர்க்க பூமியாக மாறிற்று?
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது குடிநுழைவுத் துறை. அவர்கள் செய்த தவறுகளினால் நாட்டில் கள்ளக் குடியேறிகள் அதிகமாகவே நடமாடுகின்றனர்.
இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம் நமது நாடு, தடுப்பு முகாம்களில் தங்கி இருக்கும் கள்ளக் குடியேறிகளுக்காக ஒவ்வொரு மாதமும் 35 இலட்சம் வெள்ளியை உணவுகளுக்காக செலவு செய்கிறது என்பது மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் அது தண்டச் செலவு தான். அர்சாங்கப் பணம் வீணடிக்கப்படுகிறது
அதற்குக் காரணம் குடிநுழைவுத் துறை !
No comments:
Post a Comment