இன்று (16.6.2019) நம் மலேசிய மன்ணின் மாபெரும் தலைவர் மறைந்த துன் சம்பந்தனாரின் நூறாவது பிறந்த நாள்.
ம.இ.கா. வை வழி நடத்த, இந்தியர்களுக்குத் தலைமை தாங்க எத்தனையோ தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் வந்த பின் தொடர்ந்து நிலைத்து நிற்பவர் துன் சம்பந்தன் மட்டுமே. இனி அவரின் இடத்தை நிரப்புவது என்பது இயலாத காரியம். அது சாத்தியம் இல்லை.
வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதித்தவர் துன். நாடு சுதந்திரம் பெற்ற போது பிரிட்டன் உடனான ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மூவரில் அவரும் ஒருவர்.
இந்திய சமுதாயத்திற்குச் சரியான ஒரு பாதையை வகுத்தவர். தோட்டத் துண்டாடலின் போது பெரும் அவதிக்குள்ளான தோட்டப் பாட்டாளிகளுக்காக களத்தில் இறங்கி பத்து பத்து வெள்ளியாக பாட்டாளிகளிடமிருந்து வசூல் செய்து தோட்டங்களை வாங்கி சாதனைப் படைத்தவர். அப்போது அவர் சொன்ன சிந்திக்க வேண்டிய வேண்டிய ஒரு சொல்: குருவிக்கும் கூடு உண்டு நமக்கு என்ன உண்டு" என்கிற அந்த மந்திரச் சொல்.
பொதுவாக அவருக்கு மக்களிடையே ஒரு செல்வாக்கு இருந்தது என்பது உண்மை. அவரிடம் உண்மை இருந்தது. நேர்மை இருந்தது. சத்தியம் இருந்தது. அரசியலுக்கு வந்து தனது சொத்துக்களை இழந்த ஒரே மனிதர் என்கிற பெயரும் இருந்தது!
இந்தியர்களின் பொருளாதாரம் ஒரு விழுக்காடு என்றால் அது கூட அவரால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் மூலம் தான். அவருக்குப் பின்னர் அந்த விழுக்காட்டை கூட்டுகிற அளவுக்கு யாருக்கும் துணிவில்லை! கூட்டுறவு சங்கம் அமைந்திருக்கும் இன்றைய விஸ்மா துன் சம்பந்தன் கூட அவர் காலத்தில் கட்டப்பட்டது தான்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் தான் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு ஒரு முடிவு காணப்பட்டது. தோட்டம் தோட்டமாக சென்று தோட்டப் பாட்டாளிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டன.
துன் சம்பந்தன் அவர்களை நான் இருமுறை பார்த்திருக்கிறேன். முதல் முறை நான் வாழ்ந்த செனவாங் தோட்டத்திற்குக் கூட்டுறவு சங்கத்திற்கு ஆள் சேர்க்க வந்திருந்தார். அப்போது எனது பெற்றோர்கள் அங்கத்தினராக சேர்ந்தார்கள். இரண்டாவது முறை நான் வேலை செய்து கொண்டிருந்த சுங்காலா தோட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருடன் பேசிய ஞாபகம் உண்டு. அவருடைய அந்த புன்னகை இன்னமும் மனதில் நிற்கிறது.
துன் சம்பந்தன் அவர்கள் ஒரு மாபெரும் தலைவர். மலேசிய இந்திய சமூகம் மறக்க முடியாத ஒரு தலைவர், அவர் செய்த சாதனைகளை அவருக்குப் பின்னர் வந்தவர்களால் முறியடிக்க முடியவில்லை.
அவருடைய நினைவுகள் எக்காலமும் நிறைந்திருக்கும்!
No comments:
Post a Comment