Sunday 2 June 2019

அந்நியத் தொழிலாளர் அனுமதி..!

மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் நல்லதொரு  செய்தியை நமது வர்த்தகச் சமூகத்திற்குக்  கொடுத்திருக்கிறார்.

நாடு திரும்பும் அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் அவர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களை எடுத்துக் கொள்ள வசதியாக அந்தப் பெர்மிட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இது ஏற்கனவே நடப்பில் இருந்த ஒரு சட்டம் தான். ஆனால் அதனை அரசாங்கம் கடந்த 2016-ம் ஆண்டு  நிறுத்திக் கொண்டது.  அதனை மீண்டும் அமலுக்குக்கொண்டு வர இப்போது அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. 

வரவேற்கக் கூடிய ஒரு செய்தி. நமது வர்த்தக சமூகத்தினர் மகிழ்ச்சி அடைவர் என நம்பலாம்.

இதில் குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நமது உணவக உரிமையாளர்கள் தான் என்று தாராளமாகச் சொல்லலாம்.   பல உணவகங்கள்  மூடப்பட்டு விட்டதாக அவர்கள் சொல்லுகின்றனர்,

அதிகம் பாதிப்பு உணவகத் துறை என்று நாம் சொன்னாலும்  அதிகம் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டவர்களும்  அவர்கள் தான்! இப்போதும் கூட நான் பார்க்கின்ற சில விஷயங்களைச் சொல்லுகிறேன்:  பல உணவகங்கள் தங்களது தொழிலாளர்களுக்குப் போதுமான ஓய்வு நேரம் கொடுப்பதில்லை. அதனால் அவர்கள் வேலை திருப்திகரமாக அமையவில்லை. அதனை அவர்கள் குற்றமாகக் கருதுகின்றனர். சரி அவர்களின் சம்பளம் திருப்திகரமாக இருக்கின்றனவா? அதுவும் இல்லை. கேட்டால் அரசாங்கம் கொடுத்த சட்ட திட்டங்களை வைத்துத் தான் நாங்கள்  சம்பளம்  கொடுக்கிறோம் என்கிறார்கள்.  அந்த சம்பளத்தைக் கொடுத்தாலாவது புண்ணியம் கிடைக்கும். அதையும் கொடுப்பதில்லை.

உண்மையைச் சொன்னால்  தொழிலாளர்களுக்குப் போதுமான ஓய்வுகள் இல்லை  போதுமான சம்பளம் இல்லை. ஏதாவது  பேசினால் உடனே வன்முறையில் இறங்கிவிடுகிறார்கள். அவர்களுக்குக்  காவல்துறை  பக்க பலம்.  

உணவகத் துறையில் பல பலவீனங்கள்.  வேலை தேடி வந்தவர்களையும் சம்பளம் கொடுக்காமல் விரட்டியடித்த கதைகள்  எல்லாம்  உண்டு. இந்த நிலையில்  தமிழ் நாட்டிலிருந்து வந்து இவர்களுக்கு இலவசமாக தொண்டு செய்ய வேண்டுமாம்! 

உண்மையைச் சொன்னால் இவ்வளவு பிரச்சனைகளுக்கும்  காரணம் இவர்களே தான்.  இந்தத் தொழிலில் பல ஆண்டுகளாக இருப்பவர்களால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு அவர்களது தொழில் தான் முக்கியம்.  தமிழகத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே  ஒரு சிலர் உணவகங்களைத் திறந்து  அவர்களை ஏமாற்றி சம்பளம் கொடுக்காமல் அடித்து உதைத்து பணம் சம்பாதிக்கும் திடீர் பணக்காரர்கள்  உணவகத் துறைக்கு வந்தது தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்!

இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இனி நல்லதோ கெட்டதோ எல்லாம் உங்கள் கையில்!

No comments:

Post a Comment