Sunday 30 June 2019

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்!

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைப் பற்றியான ஒரு கட்டுரையை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ் மலர் நாளிதழில் எழுதியிருந்தார்.

மிகவும் தெளிவான ஒரு கட்டுரை. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சம்பந்தமாக அரசியல் அமைப்பு  என்ன சொல்லுகிறது, எதிர்த்துப் பேசுபவர்கள் நிந்தனைச் சட்டத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்ப்தெல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்.

வாழ்த்துகள் நண்பரே! காரணம் இந்தத் தெளிவு என்னிடம் இல்லை. இப்போது தான் நான் அறிய வருகிறேன்.  நமது சமூகத்தினர் அனைவரும் நமது உரிமைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் மொழி என்கிற போது அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் நிந்தனைச் சட்டம் பாயும் என்று தெரிந்தும் இப்போது அவரவர் விருப்பத்திற்குப் பேச ஆரம்பித்து விட்டார்களே! அது யாருடைய குற்றம்? நாம அம்னோவைத்தான் குறை சொல்ல வேண்டி வரும்! ஆமாம்! அவர்களுடைய ஆண்டு கூட்டங்களில் எத்தனையோ முறை இந்த நிந்தனைப் பேச்சுக்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் மீது எந்தச் சட்டமும் பாயவில்லையே!  அப்போதைய அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது என்று தாராளமாகச் சொல்லலாம். அதிலும் பினாங்கு "காக்காய்கள்"  அதிகமாகவே சத்தம் போட்டன! அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!  எடுக்கவும் துணிச்சலில்லை!  காரணம் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர்!

அரசாங்க ஆதரவு இருப்பதனால் இப்போது யார் வேண்டுமாலும்  பேசலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விட்டது! அதனால் தான் பாஸ் கட்சியில் உள்ள அம்மையார் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். இவர் அரபு மொழிதெரிந்தவர் அனைவரும் அரபு படிக்க வேண்டும் என்கிறார்!   நமது நாட்டின் சரித்திரம் அறியாத இது போன்ற பத்தாம்பசலிகள் இருந்தால் நாடு என்ன ஆகும் என்பது நமக்குப் புரியவில்லை! படித்தவர். மேற் கல்வி படித்தவர். பொறுப்பான தொழிலில் உள்ளவர். இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டியவர்.ஆனால் இவர் பேசுவதோ வெறுப்பைத் தூண்டும் பேச்சு!  இவர் என்னஆன்மீகவாதி  என்று நமக்குப் புரியவில்லை!

இப்போது நம்மிடையே ஒரு கேள்வி உண்டு.  இது போன்று பேசுபவர்களை இன்றைய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?  இது வரை ஒன்றும் செய்யவில்லை.  இனி மேலும் ஒன்று செய்யாது என்றே தோன்றுகிறது!

எது எப்படி இருந்தாலும் சரி தமிழ்ப்பள்ளிகள் தொடரும் என்பதே உண்மை!  மாற்றுக் கருத்து இல்லை!                                                                                                                                                                                    

No comments:

Post a Comment