Friday 7 June 2019

ஒரே பள்ளி முறை..!

"எல்லா மொழிப் பள்ளிகளையும் அகற்றிவிட்டு ஒரே பள்ளி முறையைக் கொண்டு வர வேண்டும்"   என்பதாகக்   கல்வி அமைச்சர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

கல்வி அமைச்சர் கூறியிருப்பது இது ஒன்று முதல் முறை அல்ல.  இதற்கு முன்னரும் பல முறை கூறப்பட்ட கருத்து தான். முன்னாள் கல்வி அமைச்சர்கள் அல்லது அம்னோ மாநாடுகளில்  பேராளர்கள் பலரால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கருத்து தான். 

ஆனாலும் இந்தக்  கருத்துக்கு அவர்கள் கூறுகின்ற காரணங்கள் தான்  சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  அவர்கள் கூறுவதெல்லாம்  மக்களிடையே வர வர ஒற்றுமை குறைந்து வருகிறது அல்லது பல்லின , மாணவரிடையே ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது  என்பது தான் அவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டு!

தமிழ்ப் பள்ளிகளை எடுத்துக் கொண்டால் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இருந்து வருகின்றன. தாய் மொழிப் பள்ளிகள் என்றால் அது தமிழும் சீன மொழி பள்ளிகளும் தான். 

பொதுவாக தாய் மொழிப் பள்ளிகளால் எந்தக் காலத்திலும் மக்களிடையே ஒற்றுமை குலைவதாக எந்த ஒரு  சான்றும் இல்லை.  அப்படி ஒற்றுமையைக் குலைப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை! 200 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளும் சரி, சீனப் பள்ளிகளும் சரி இந்த நாட்டில் இருக்கின்றன என்றால் தாய் மொழிப் பள்ளிகளால்  எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது தான் பொருள்.

ஆனால் இந்தப் பிரச்சனை  தாய் மொழிகளை வெறுக்கும் ஒரு சில அரசியல்வாதிகளால்  வலிந்து ஏற்படுத்தப்பட்ட  ஒரு வெறுப்புணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் சமீப காலங்களில் தான் இந்தப் பிரச்சனை எழுப்பப் பட்டது என்பதும் உண்மை. 

காரணம் சமீப காலங்களில் தேசிய பள்ளிகளின் மீது பல விதமான குற்றச்சாட்டுகள்.  அவை இஸ்லாமிய பள்ளிகளாக மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் பெற்றோர்களால் எழுப்பப்பட்டன.  தாய் மொழிப் பள்ளிகள் வேண்டாம் என்று நினப்பவர்கள்  இந்நாட்டு மக்கள் இஸ்லாமிய கல்வியைப் பயில வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில்  தாய் மொழிக் கல்வி வேண்டாம் என்கின்றனர். அது தான் உண்மை.

தாய் மொழிக்கல்வி என்பது நமது உரிமை. அது ஏதோ தங்கத் தாம்பாளத்தில் வைத்து தூக்கிக் கொடுக்கப்பட்டதல்ல என்பதை கல்வி அமைச்சர் உணர வேண்டும்.

எது எப்படியோ கல்வி அமைச்சர் எங்களது உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஒரே பள்ளி முறையை  நாம் வரவேற்கவில்லை!

No comments:

Post a Comment