Monday 10 June 2019

இதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகத் தான்!

சில சமயங்களில் சிலர் விடும் அறிக்கைகளைப் படிக்கின்ற போது நமக்குத் தான் கோபம் வருகிறதே தவிர அறிக்கை விடுபவர்களுக்குக் கோபமும் கூட வரும் என்பதை எண்ணிக்  கூட பார்க்க முடிவதில்லை.

அப்படித்தான் சமீபத்திய அறிக்கை ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் எப்போது வழங்கப் போகிறீர்கள் என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி அது என்பதும் நமக்குத் தெரிகிறது.

"எப்போது கிடைக்கும்"  என்பது பற்றி நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  அது கிடைத்தாலும் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்! அதனால் எவ்வளவு விரைவில் கிடைக்குமோ  அவ்வளவு  விரைவில் அது கிடைக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கமும் கூட.   காரணம் அரசியல்வாதிகளின் பேச்சு அடுத்த மேடையோடு போச்சு என்பது தான் அவர்களின் கலாச்சாரம். அதனால் அவர்களுக்குத் தொடர்ந்தாற் போல நெருக்குதல் கொடுத்தால் அன்றி அவர்கள் இயங்கமாட்டார்கள்> அதனை அந்த நெருக்குதலை நாம் வர வேற்கிறோம். 

ஆனால் நம்மிடமும் ஒரு கேள்வி உண்டு.  பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிக்ளுக்குக் கொடுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் ம.இ.கா.வினரால் அப்படியே மறைக்கப் பட்டதே அதனைப் பற்றியும் ஒரு வார்த்தை இவர்கள் பேசியிருந்தால் நாம் பாராட்டலாம்.  2000 ஏக்கர் என்பது அவ்வளவு சின்ன விஷயமா? நமக்கே புரிவில்லை! ஐந்து ஏக்கர் நிலத்திற்குக் குரல் கொடுக்கும் இவர்கள் 2000 ஏக்கர் நிலத்திற்குத் தங்களது குரலை எழுப்பவில்லையே என்கிற ஆதங்கம்  நமக்கு உண்டு.

தான் சார்ந்த மனிதர்கள், தான் சார்ந்த இயக்கம், தான் சார்ந்த கட்சி என்ன தவறுகள் செய்தாலும் நாங்கள் பேச மாட்டோம்!  என்ன தவறுகள் செய்தாலும் அவர்களைத் தட்டிக் கொடுப்போம் என்று சொல்லுபவர்களை நாம் தாம்பாளத் தட்டிலா வைத்து வர வேற்க முடியும்?

நீதி அனைவருக்கும் ஒன்று தான்.  அன்று ம.இ.கா. வைத் தட்டிக் கொடுத்ததினால் இன்று தமிழன் தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பதை நமது கட்சிகள் உணர வேண்டும்.  இன்றும் அதனை தொடரத் தான் வேண்டுமா என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். 

மற்றபடி உங்களின் ஐந்து ஏக்கர் நில போராட்டத்தை நானும் வர வேற்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்!

No comments:

Post a Comment