Saturday 8 June 2019

பிரதமர் சரியான வழியில் போகிறாரா?

 டாக்டர் மகாதிர், பிரதமராக பதவி ஏற்ற பின். சரியான வழியில் தான் செல்கிறாரா அல்லது தான்தோன்றித் தனமாக  அவர் செயல்படுகிறாரா?

அவர் மீது இப்போது பல குற்றச்சாட்டுக்கள்.   அவர் தானே பல முடிவுகளை எடுக்கிறார். தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட  வாக்குறுதிகளை  அவரே மீறுகிறார்.  பக்காத்தான் தலைவர்களிடம் அவர் கலந்தோசிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் எதுவும் பேசப்படுவதில்லை. அவரே முடிவுகளை எடுக்கிறார். அவரே சுயமாக செயல்படுகிறார் என்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.  கடைசியாக அவர் செய்த நியமனம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்திபா கோயா வை நியமித்தது. 

இந்த நியமனத்தில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன.  

இந்தப் பதவியை ஏற்கும் முன்னர் லத்திபா கோயா பி.கே.அர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர்,   லத்திபா கோயாவின் நியமனம் கட்சியின் தலைவர் அன்வார் கூட அறியவில்லை! 

இங்கு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது லத்திபா கோயா அந்தப் பதவிக்கு ஏற்றவரா, தகுதியானவரா என்பதல்ல. அவர் தகுதியானவர் என்பதை எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆனால் அந்த நியமனம் முறையாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது தான் அனைவரும் கூறுகின்ற குற்றச்சாட்டு. 

ஆனால் பிரதமர் மகாதிர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கு அப்படி நியமனம் செய்ய அதிகாரம் உண்டு. அந்த நியமனத்தை அரச ஒப்புதலுடன்  நிறைவேற்றியிருக்கிறார்.

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  டாக்டர் மகாதிர் சுமார் 22 ஆண்டுகள் இந்த நாட்டை வழி நடத்தியவர். அவருடைய அனுபவங்களுக்கு ஈடு இணையாக யாரும் இப்போதைய அமைச்சரவையில் இல்லை.  அது மட்டும் அல்ல. அவர் எல்லாக் காலத்திலும் எது சரியோ அதை நிறைவேற்ற நினைப்பவர். அப்படித்தான் அவரின் கடந்த காலம்.

இப்போதோ நிலைமையே வேறு. அமைச்சர்கள் அனைவரும் முன்பின் அனுபவம் இல்லாதவர்கள்.  அவரும் தனது காலம் அதிகம் இல்லை என்பதை உணர்ந்தவர்.  மக்களோ பக்காத்தான் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  பேச்சு அதிகம்; செயலில் ஒன்றுமில்லை என்கிற நிலைமைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

அதனால் தான்,  தான் இருக்கும் போதே  செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாம் முறையாக செய்வதற்கு நேரம் இல்லை.  காரியங்கள் ஆக வேண்டும். மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.  கெட்டவன் என்கிற பெயர் எடுத்தாலும் பரவாயில்லை  செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாகச் செய்ய வேண்டும்.  அதனால் தான் அவர் தம் போக்கில் தனது காரியங்களைச் செய்கின்றார். 

பிரதமரின் மேல் குற்றச்சாட்டுக்களைக் கூறிக்கொண்டிருப்பதை விட அவர் அனுபவமிக்கவர், நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர், மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பதை நாம் நம்ப வேண்டும். 

என்ன சொல்லி என்ன பயன்? அவர் அவராகத்தான் இருப்பார்! அது தான் மகாதிர்!

No comments:

Post a Comment