பாஸ் மாநாட்டில் பேசிய பேச்சுக்கள். தாய்மொழி பள்ளிகளின் மீதான பேச்சுக்கள், மற்ற இனத்தவர்களின் சினத்தை தூண்டுவதாக அமைந்திருக்கிறது என்பது உண்மை.
அவர்கள் அறிவற்றவர்களோ, அறிவு இல்லாதவர்களோ என்றெல்லாம் யாரையும் நம்மால் மதிப்பிட முடியாது. எல்லாம் படித்தவர்கள். பண்புள்ளவர்கள். படித்த மேதைகள். ஏன்? சமீபத்தில் தற்காப்பு அமைச்சர், மாட் சாபு, சிங்கப்பூரில் பேசிய ஆங்கில பேச்சைக் கூட பாஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் கிண்டலடித்திருக்கிறார்! அந்த அளவுக்கு அவர்கள் மலேசிய அரசியலில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதில் நமக்கு ஐயமில்லை.
ஆனால் சில சமயங்களில் அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் இனங்களிடையே பிரிவை உண்டாக்குவது போன்ற ஒரு தோற்றத்தை அவர்களே ஏற்படுத்துகின்றனர். அவர்கள் மறை முகமாக மற்ற இனத்தவர்களை வெறுக்கின்றார்கள் என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.
இப்போது அவர்கள் தாய்மொழி பள்ளிகள் தேவையில்லை என்பது வெறுப்பின் உச்சம் என்று நாம் சொல்லலாம் அல்லவா? தாய்மொழி பள்ளிகள் இன்றா, நேற்றா இந்நாட்டில் தோன்றியவை? தமிழ் மொழி இந்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, அதிகாரத்துவ மொழியாக இருந்து வருகிறது. சீன மொழியும் அப்படித்தான். இந்த மொழிகளின் மூலம் இனங்களிடையே அப்படி என்ன வெற்றுமைகள் வளர்ந்து விட்டன?
மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் யார்? இன்று பிரிவினை என்பது தேசிய பள்ளிகளில் இருந்து தான் ஆரம்பாகிறது. அந்தப் பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் அரசியல் கட்சியினர். ஒற்றுமையை வளர்க்க வேண்டிய அரசியல்வாதிகள் வேற்றுமையை வளர்க்க தேசியப்பள்ளிகளைப் பயன் படுத்துகின்றனர்.
இன்றைய நிலையில் சீனப்பள்ளிகளும், தமிழ்ப்பள்ளிகளும் பல வகைகளில் தேசியப்பள்ளிகளை விட சிறப்பாக இயங்குகின்றன. கல்வியில் முன்னணியில் இருக்கின்றன. விஞ்ஞான தொடர்பான போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகள் உலக அளவில் வெற்றி பெறுகின்றன.
ஓரளவே அரசாங்க உதவியுடன் இயங்கும் இந்த பள்ளிகளின் வெற்றிகளைப் பற்றி பெருமைப் பட வேண்டும். பொறாமைப் பட கூடாது. அந்த பொறாமை தான் இப்போது இந்த அரசியல்வாதிகளையும் ஒட்டிக் கொண்டது!
பாஸ் கட்சியினரின் இந்தத் தாக்குதலுக்கு பொறாமை தான் காரணமே தவிர வேறு காரணங்கள் இல்லை. கல்வி என்றுமே பிரிவினையை ஏற்படுத்துவதில்லை. அரசியவாதிகளுக்கு அதுவே தொழில்!
தாய்மொழிப்பள்ளிகள் ஒன்றும் நமது நாட்டுக்குப் புதிதல்ல!
No comments:
Post a Comment